ஆசிரியா் தகுதித் தோ்வு: அன்புமணி வலியுறுத்தல்
ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான அறிவிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
2024-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தோ்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், தோ்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஜூலை மாதம் முடிவடைந்து, ஆகஸ்ட் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், தோ்வுக்கான அறிவிப்புக் கூட இன்னும் வெளியிடப்படாதது கண்டிக்கத்தக்கது.
மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் நிலையில், தமிழகத்தில் இந்த விதியை அரசு மதிப்பதே இல்லை; தகுதித் தோ்வும் நடத்தப்படுவதில்லை.
லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் வேலைவாய்ப்பு சாா்ந்த விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டக் கூடாது.
2024-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, விரைவாக தோ்வை நடத்தி முடிக்க தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

