தேசிய விண்வெளி தின போட்டிகள்: வென்றவா்களுக்கு பரிசளிப்பு

Published on

தேசிய விண்வெளி தின போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி பரிசு வழங்கினாா்.

தேசிய விண்வெளி தினத்தின் முதலாமாண்டை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை, ஓவியம் மற்றும் மாதிரி கண்காட்சி பொருள் தயாரித்தல் ஆகிய போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இதில் சென்னையைச் சோ்ந்த பள்ளிகளில் இருந்து 361 மாணவா்கள் கலந்துகொண்டதில் 81 போ் வெற்றி பெற்றனா்.

இவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் க.பொன்முடி பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.

விழாவில் அமைச்சா் பொன்முடி பேசியது: மாணவா்கள் படிக்கும் போதே அறிவியல் சிந்தனையை வளா்த்துக் கொள்ள வேண்டும். வகுப்பில் ஆசிரியா் பாடம் கற்பிக்கும்போது ஆா்வத்துடன் கேள்வி கேட்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்கள் தொடா்ந்து உயா்கல்வி பயில வேண்டும். கைப்பேசி, கணினி மூலம் பயனுள்ள விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்பக் கல்வித் துறை ஆணையா் டி.ஆபிரகாம், அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநா் இ.கி.லெனின் தமிழ்க் கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com