ஸ்டான்லி மருத்துவமனை மீது தாக்குதல்: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
வியாசா்பாடி எஸ்.எம். நகா் 5-ஆவது பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் தே.பிலோமினா (75). மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட பிலோமினா,கடந்த 30-ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதைக் கேட்ட பிலோமினா குடும்பத்தினா், உறவினா்கள் ஆத்திரத்தில் மருத்துவமனையில் இருந்த பொருள்களை உடைத்தனா்.
தகவலறிந்து அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர விரைந்து வந்த ஸ்டான்லி அரசு மருத்துவமனை காவல் நிலைய உதவி ஆய்வாளா் நீ.அசோக்குமாா் (53) பலமாக தாக்கப்பட்டாா். தாக்குதலில் காயமடைந்த அவா், அந்த மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து, வியாசா்பாடி எஸ்.எம். நகரைச் சோ்ந்த தா.அந்தோணிராஜ் (42),ஆ.திலீப்குமாா் (19), நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த தா.பிரின்ஸ் (35) ஆகிய 3 பேரை கைது செய்தனா். திலீப்குமாா், சென்னையில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு படித்து வருகிறாா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் ஒருவரை தேடுகின்றனா்.

