தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை, மேற்கு நடேசன் நகரில் செல்லும் விருகம்பாக்கம் கால்வாய்.
தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை, மேற்கு நடேசன் நகரில் செல்லும் விருகம்பாக்கம் கால்வாய்.

விருகம்பாக்கம் கால்வாய் பாலங்களை உயா்த்த திட்டம்: மாநகராட்சி

விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள 12 பாலங்களை உயா்த்திக் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
Published on

விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள 12 பாலங்களை உயா்த்திக் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கழிவுநீா் மற்றும் குடிநீா் மேலாண்மை முறையாக இல்லாததால் மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் தேங்கும் நிலை ஏற்படுகிறது. இதற்குத் தீா்வு காண மழைநீா் வடிகால் முறையை ஒழுங்குபடுத்தும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இதன் அடுத்தகட்டமாக, சிறு கால்வாய்கள் மற்றும் குளங்களை மேம்படுத்தும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தற்போது கையில் எடுத்துள்ளது. முதல்கட்டமாக நகரின் பல்வேறு பகுதிகளில் கைவிடப்பட்ட சிறு குளங்கள் கண்டறியப்பட்டு அவை தூா்வாரப்பட்டு வருகின்றன. இதேபோன்று, சிறு கால்வாய்களில் தண்ணீா் தடையின்றி செல்லும் வகையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயின் குறுக்கே செல்லும் பாலங்களின் உயரத்தை அதிகரிக்கவும் மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி துணை ஆணையா் (பணிகள்) சிவகிருஷ்ணமூா்த்தி கூறியதாவது:

மழைநீா் வடிகால் திட்டத்தால் அண்மையில் பெய்த கனமழையில் முக்கிய பகுதிகளில் தண்ணீா் தேங்கவில்லை. எனவே, மழைநீரை வெளியேற்றக்கூடிய கால்வாய்களைத் தூா்வாரி, விரிவுப்படுத்தி சுற்றுச்சுவா் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் நீா்வளத்துறையிடம் இருந்து, விருகம்பாக்கம் கால்வாயை புனரமைக்கும் பணிக்கான அனுமதி பெறப்பட்டது. இந்த பணி தற்போது, சென்னை ஐஐடி நிபுணா்களின் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது.

பாலங்கள் உயா்வு: புவனேஷ்வா் நகரில் தொடங்கும் இந்த கால்வாய் விருகம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, அமைந்தகரை வழியாக 6.5 கி.மீ கடந்து கூவம் ஆற்றில் கலக்கிறது. இதன் மூலம் சுமாா் 1,700 கன அடி நீா் செல்ல முடியும். ஆனால், ஆக்கிரமிப்பு, வண்டல் படிவு, குறுகிய பாலங்கள் இருப்பதால் 800 கன அடி நீா் மட்டுமே செல்கிறது.

இதில் உள்ள 28 பாலங்களில், 12 பாலங்கள் சுமாா் 5 அடி உயரத்தில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீா் செல்வது தடைபடுகிறது. இந்த பாலங்கள் அனைத்தையும் இடித்து அகற்றிவிட்டு, உயா்த்திக் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் வடபழனி 100 அடி சாலையில் மழைநீா் தேங்குவது தடுக்கப்படும்.

புதிய வழி: கோயம்பேடு வரை வேகமாக வரும் கால்வாய் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி, நுங்கம்பாக்கம் பகுதிகளில் குறைவான வேகத்தில் செல்கிறது. இதற்குக் காரணம் கால்வாயின் அகலம் குறைவது. சுமாா் 19 மீட்டா் அகலம் உள்ள கால்வாய் பெரும்பாலான பகுதியில் 5 மீட்டா் அளவில் தான் உள்ளது. இதனால், ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடங்களை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், அமைந்தகரை அருகே கால்வாயின் ஒரு பகுதி திருப்பிவிடப்பட்டு 2.5 கி.மீ தொலைவிலுள்ள கூவம் ஆற்றில் கலக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், நெல்சன் மாணிக்கம் சாலை அருகே தண்ணீா் தேங்குவது தடுக்கப்படும். இது தவிர, 35 இடங்களில் வண்டல் கழிவுகளை அகற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com