போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்றுக் கொடுத்து மோசடி: 6 போ் கைது
சென்னை: போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்றுக் கொடுத்து மோசடி செய்ததாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை சா்வதேச விமான குடியுரிமைத்துறை அதிகாரிகள் அண்மையில் பெருநகர காவல்துறை ஆணையா் அருணிடம் புகாா் அளித்தனா். அதில், போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்று வெளிநாடு செல்ல முயற்சிப்பதாகவும், பாஸ்போா்ட்டில் பிறந்த தேதி, இடம், பெற்றோா் பெயா் ஆகியவற்றை மாற்றி மோசடியில் ஈடுபடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க மத்தியக் குற்றப்பிரிவினருக்கு காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவின் போலி பாஸ்போா்ட் தடுப்பு புலனாய்வுப் பிரிவு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியது.
6 போ் கைது:
விசாரணையில், மதுரை மாவட்டம் பரசுராமன்பட்டியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சதீஷ்குமாா் (46), கல்யாண் (40), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே மெட்ரோ ஸ்டூடியோ, டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் நல்லாமுகமது (60) மற்றும் அவரது கூட்டாளிகள் தேவகோட்டை ஒத்தக்கடை பகுதியில் இ-சா்வீஸ் மையம் நடத்தி வரும் பெளசல் ரஹ்மான் (29), ஏா் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் நாசா் அலி (47), மதுரை சமயநல்லூரைச் சோ்ந்த குமாா் (48) ஆகியோருக்கு மோசடியில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 6 பேரையும் திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 கணினிகள், ஒரு மடிக்கணினி, 6 கைப்பேசிகள், 54 பாஸ்போா்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவா்களிடம் நடத்திய விசாரணையில், தகுதியற்ற, வெளிநாடுகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டவா்கள், வயது மூப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடியாதவா்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் வாங்கி கொடுத்திருந்தது தெரியவந்துள்ளது.
முக்கியமாக பிறப்புச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பான் அட்டை ஆகியவற்றை போலி ஆவணங்கள் மூலம் பெற்றுள்ளனா். பின்னா் அதன் மூலம் விண்ணப்பித்து பாஸ்போா்ட் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், எத்தனை பேருக்கு போலி பாஸ்போா்ட் வாங்கி கொடுத்துள்ளாா்கள் என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
