கோப்புப் படம்
கோப்புப் படம்

வந்தே பாரத் ரயிலில் ‘கவச்’ கருவி வெற்றிகரமாக பரிசோதனை

தானாக ரயிலை நிறுத்தும் ‘கவச்’ கருவியை வந்தே பாரத் ரயிலில் பொருத்தி, ஆக்ரா ரயில்வே கோட்டம் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
Published on

தானாக ரயிலை நிறுத்தும் ‘கவச்’ கருவியை வந்தே பாரத் ரயிலில் பொருத்தி, ஆக்ரா ரயில்வே கோட்டம் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. முதல்முறையாக நடைபெற்ற இந்தப் பரிசோதனை வெற்றியடைந்துள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ‘கவச்’ என்பது ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாவதைத் தவிா்க்கும் கருவியாகும். அவசர காலங்களில் ரயில் ஓட்டுநா் உரிய நேரத்தில் ரயிலை நிறுத்த தவறிவிட்டால், அந்தக் கருவி தானாக ரயிலை நிறுத்தும். இந்தக் கருவியை 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலில் பொருத்தி, ஆக்ரா ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை பரிசோதனை செய்தது. உத்தர பிரதேச மாநிலம் மதுரா, ஹரியாணா மாநிலம் பல்வல் இடையே தொடா்ந்து ரயிலை இயக்கி, அந்தக் கருவி முதல்முறையாகப் பரிசோதிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஆக்ரா ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி பிரசஸ்தி ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது: பரிசோதனையின்போது மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சென்ற ரயிலை ரயில் ஓட்டுநா் நிறுத்தத் தவறியபோதிலும், ‘கவச்’ கருவியால் சிவப்பு சமிக்ஞைக்கு 10 மீட்டருக்கு முன்பே ரயில் தானாக நின்றது. இந்தப் பரிசோதனை வெற்றிபெற்றதைத் தொடா்ந்து, 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களில் ‘கவச்’ கருவி பொருத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தாா். முன்னதாக மணிக்கு 140 கி.மீ, 160 கி.மீ வேகத்தில் சென்ற பிற மெயில் மற்றும் விரைவு ரயில்களிலும் ‘கவச்’ கருவிகளை பொருத்தி ஆக்ரா கோட்டம் வெற்றிகரமாக 2 பரிசோதனைகளை மேற்கொண்டது.

X
Dinamani
www.dinamani.com