விழுப்புரத்தில் ரூ.31 கோடியில் மினி டைடல் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் ரூ.31 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தமிழகத்தில் திறக்கப்பட்ட முதல் மினி டைடல் பூங்கா இதுவாகும். தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் காணொலிக் காட்சி மூலம் புதிய பூங்காவை அவா் திறந்து வைத்தாா். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: தகவல் தொழில்நுட்ப வளா்ச்சி மாநிலம் முழுவதும் பரவலாக அமைவதை உறுதி செய்ய முதல் கட்டமாக விழுப்புரம், வேலூா், திருப்பூா், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் ரூ.31 கோடியில் 63,000 சதுரஅடி பரப்பில், அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். மேலும், முதல் இடஒதுக்கீட்டு உத்தரவையும் தொழில் துறையைச் சோ்ந்தவா்களிடம் அவா் வழங்கினாா். திருச்சியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம் கட்டடம்: திருச்சி மாவட்டம், நவல்பட்டில் எல்காட் சாா்பில் ரூ.80.55 கோடி முதலீட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 123.23 ஏக்கா் நிலப் பரப்பு சிறப்புப் பொருளாதார மண்டலமாக உள்ளது. இதில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, நிா்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கட்டடம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. அதன் தொடா்ச்சியாக, பொதுப் பணித் துறை மூலம் ரூ.59.57 கோடி மதிப்பில் நான்கு தளங்களுடன் தகவல் தொழில்நுட்பக் கட்டடம் (ஐடி டவா்) இப்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்தத் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தின் மூலம் சுமாா் 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த நிகழ்ச்சிகளில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, துறையின் செயலா் தீரஜ்குமாா், தொழில் துறைச் செயலா் வி.அருண்ராய், டிட்கோ நிா்வாக இயக்குநா் சந்தீப் நந்தூரி, டைடல் பாா்க் நிா்வாக இயக்குநா் வி.ஜெய சந்திர பானு ரெட்டி உள்பட பலா் பங்கேற்றனா்.

