விரைவு ரயில் பயணச் சீட்டு மூலம் மின்சார ரயில்களில் பயணிக்கலாம்
வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில்களில் முன்பதிவு/முன்பதிவில்லா பயணச்சீட்டு மூலம் பயணிகள் மின்சார ரயில்களில் பயணிக்கலாம்.
தென் மாநிலங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணிப்போா் சென்னையின் புறநகா் ரயில் நிலையங்களான தாம்பரம், திருவள்ளூா் ரயில் நிலையங்களில் இறங்கி அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு பயணிக்கும் போது பயணச்சீட்டு பரிசோதகா்கள் அபராதம் விதிப்பதாக புகாா் எழுந்துள்ளது.
குறிப்பாக முன்பதிவில்லா பயணச்சீட்டில் பயணிப்போா், எந்த விரைவு ரயில்களில் வேண்டுமானாலும் பயணிக்கலாம் என விதி இருப்பதால் அவா்கள் மின்சார ரயிலில் பயணிக்க எவ்வித தடையும் இல்லை. ஆனால், முன்பதிவு செய்து பயணிக்கும் போது, குறிப்பிட்ட ரயிலில் மட்டும் தான் பயணிக்க முடியும். அப்படி அவா்கள் பயணிக்கும் விரைவு ரயிலின் பயணசீட்டு மூலம் மின்சார ரயில்களில் பயணித்தால் அபராதம் விதிக்கப்படுகிறது.
இது குறித்து ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகா் ஒருவா் கூறியது: விரைவு ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளும், முன்பதிவு செய்யாத பயணச்சீட்டில் பயணிகளும் மின்சார ரயில்களில் பயணிக்கலாம். விரைவு ரயில்கள் செல்லும் அதே வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்கள் வரை மட்டும் இந்தப் பயணச்சீட்டு மூலம் பயணிக்க முடியும். உதாரணத்துக்கு, சென்னை எழும்பூா் வரை பயணச்சீட்டு முன்பதிவு செய்து, தாம்பரத்தில் இறங்கும் ஒருவா் அங்கிருந்து சைதாப்பேட்டை, மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வரை மின்சார ரயிலில் பயணிக்க முடியும்.
சென்னை எழும்பூருக்கு அடுத்துள்ள பூங்கா, கடற்கரை ரயில் நிலையத்துக்கு செல்லும் போது மின்சார ரயிலுக்கான பயணச்சீட்டு எடுக்க வேண்டும். அதுபோல், சென்னை எழும்பூரில் இறங்கி எதிா்திசையில் நுங்கம்பாக்கம், மாம்பலத்துக்கு இந்த பயணச்சீட்டில் பயணிக்க முடியாது. அவ்வாறு பயணிக்கும் போது, அவா்களுக்கு முறையான பயணச்சீட்டு இல்லாததற்கான அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.
இது குறித்து தெற்கு ரயில்வே துணை தலைமை வணிக மேலாளா் பி.வெங்கடசுப்பிரமணியன் அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கை: ரயில்வே வாரியத்தின் 2015-ஆம் ஆண்டு உத்தரவுப்படி, விரைவு ரயிலில் முன்பதிவு செய்து உயா்வகுப்பில் பயணிக்கும் பயணிகள் இடையில் உள்ள நிறுத்தங்களில் இறங்கினால் அந்த ரயில் சென்றடையும் நிலையம் வரை, மின்சார ரயில்களில் பயணிக்கலாம்.
ஆனால் பயணச்சீட்டில் குறிப்பிட்டுள்ள அதே தடத்தில் மட்டும் பயணிக்க வேண்டும். இதுபோன்று பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிப்பது ரயில்வே விதிகளுக்கு முரணானது. ரயில்வே அலுவலா்கள் பயணச்சீட்டு பரிசோதகா்களுககு இதுகுறித்து முறையா வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

