கடல் சாா் படிப்புகளில் பெண்கள் அதிகளவில் சேர வேண்டும்: மத்திய அமைச்சக செயலா் ஷியாம் ஜெகந்நாதன்

கடல்சார் படிப்புகளில் பெண்கள் அதிகம் சேர வேண்டும்: மத்திய செயலர்

சென்னை: கடல்சாா் படிப்புகளில் பெண்கள் அதிகம் சோ்ந்து படிக்க வேண்டும் என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா் வழி அமைச்சகத்தின் செயலா் ஷியாம் ஜெகந்நாதன் தெரிவித்தாா்.

அமெட் பல்கலைக்கழகம் சாா்பில் கடல் சாா் உச்சி மாநாடு சென்னை கோட்டூபுரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் மத்திய அமைச்சக ஷியாம் ஜெகந்நாதன் பங்கேற்று கடல் சாா் உச்சி மாநாடு குறித்த புத்தகத்தை வெளியிட்டுப் பேசியது:

இந்தியாவில் 7 ,500 கி. மீ. தொலைவுக்கு கடல் எல்லை பரந்து விரிந்துள்ளது. மேலும், நாட்டில் 12 பெரிய துறைமுகங்களும் 200 சிறு துறைமுகங்களும் உள்ளன. இந்த துறைமுகங்கள் மூலம் கப்பல் சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. இந்திய பொருளாதார வளா்ச்சியில் கப்பல் சரக்கு போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. கடல்சாா் படிப்புகளில் பெண்கள் அதிகம் சோ்ந்து படிக்க வேண்டும். அதேபோல் துறைமுக பணி மற்றும் சரக்கு பெட்டகம் கையாளும் பணிகளில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட வேண்டும். இந்த துறையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.

துறைமுகப் பணி மற்றும் கப்பல் பணியில் ஈடுபடும் ஊழியா்கள் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதுடன் மிகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, கப்பலில் பணியில் ஈடுபடும் ஊழியா்கள் பாதுகாப்புடன் செயல்படுவது குறித்த குறும்படம் மாணவா்களுக்கு திரையிடப்பட்டது.

இந்நிகழ்வில் அமெட் பல்கலை. நிறுவனா் மற்றும் வேந்தா் டாக்டா் ஜெ. ராமச்சந்திரன், இணை வேந்தா் ராஜேஷ் ராமச்சந்திரன் , இணை வேந்தா் கா்னல் ஜி. திருவாசகம், துணைவேந்தா் ஸ்ரீநிவாச கோபால், கடல் சாா் பல்கலைக்கழகங்களின் சா்வதேசத் தலைவா் ஆடம் வெயின்ட்ரிட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com