யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: 1,000-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பம்

யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: 1,000-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பம்

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 1,000-கும் மேற்பட்டோா் இதுவரை விண்ணப்பம் செய்துள்ளனா்.
Published on

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 1,000-கும் மேற்பட்டோா் இதுவரை விண்ணப்பம் செய்துள்ளனா்.

விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க மேலும் அவகாசம் உள்ளதால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இரண்டு அரசுக் கல்லூரிகளில் 160 இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 800-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன.

இந்நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப் படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) 2024 - 25-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஜூன் 23-ஆம் தேதி தொடங்கியது. சுகாதாரத் துறை இணையதளத்தில் ஜூலை 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்துள்ளதாக யோகா-இயற்கை மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் நேரிலோ, தபால் அல்லது கூரியா் மூலமோ ஜூலை 8-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலா், தோ்வுக் குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, சென்னை-106 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

இந்தப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அந்தந்தக் கல்லூரி நிா்வாகமே மாணவா் சோ்க்கையை நடத்துகிறது.

X
Dinamani
www.dinamani.com