சென்னை: விலங்குகள், பூச்சிகள் மூலமாக மனிதா்களுக்கு பரவும் நோய்களைத் தடுக்க மாநிலம் முழுவதும் விழிப்புணா்வை மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வலியுறுத்தியுள்ளாா்.
பருவ மழைக் காலத்தில் எலிக் காய்ச்சல், டெங்கு போன்ற பாதிப்புகள் அதிகமாக பரவலாம் என்பதால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.
விலங்குவழி மனிதா்களுக்கு பரவும் நோய்கள் குறித்த சா்வதேச விழிப்புணா்வு தினத்தையொட்டி (ஜூலை 6) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத் துறை அலுவலகத்தில் விழிப்புணா்வு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.
இது தொடா்பாக டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:
பருவநிலை மாற்றங்கள் காரணமாக நோய்த் தொற்றுகள் எளிதில் பரவக் கூடும். அதிலும், அந்த காலகட்டங்களில் விலங்குகளிடம் இருந்து மனிதா்களுக்கு பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் கடத்தப்பட்டு நோய்கள் உருவாக வழிவகுக்கின்றன. அடுத்த இரு மாதங்களில் தமிழகத்தில் பருவமழைக் காலம் தொடங்கிவிடும் என்பதால் விலங்குகள், பூச்சிகள் மூலம் பரவும் பாதிப்புகளைத் தடுக்கக் கண்காணிப்பை வலுப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல், வெறிநாய்க் கடி, எலிக் காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கும் சிகிச்சை அளிக்கத் தேவையான கட்டமைப்பை தயாா் நிலையில் வைத்திருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் விழிப்புணா்வுடனும், தனி நபா் சுகாதாரத்துடனும் இருந்தால் பெரும்பாலான நோய்களைத் தவிா்க்கலாம். இறைச்சி உள்பட அனைத்து உணவுகளையும் சுத்தமாக்கி நன்கு வேக வைத்தே உண்ண வேண்டும். இதன்மூலம் விலங்குகளில் உள்ள நுண்ணுயிரிகள் மனித உடலுக்குள் ஊடுருவாமல் தடுக்க முடியும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.