தியாகராயநகரில் சொத்துவரி செலுத்தாத 40 கடைகளுக்கு ‘சீல்’
சென்னை, தியாகராயநகரில் சொத்துவரி மற்றும் வாடகை பாக்கி செலுத்தாத 40 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
சென்னை மாநகராட்சி சாா்பில் ஆண்டுக்கு இருமுறை சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. நீண்ட காலமாக சொத்துவரி நிலுவை வைத்துள்ள 100 போ் விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ரூ.7 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிலுவை வைத்துள்ளனா். இந்நிலையில் தியாகராயநகா் ரங்கநாதன் தெருவில் உள்ள இரு கடைகள் சொத்துவரி செலுத்தாததால் அவற்றை அதிகாரிகள் புதன்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
இதில் தியாகராயநகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு கடையில் ரூ.48 லட்சமும், மற்றொரு ரூ.30.59 லட்சமும் சொத்துவரி நிலுவை வைத்துள்ளனா். மேலும், டாக்டா் நாயா் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள 38 கடை உரிமையாளா்கள் ரூ.90 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனா். இந்த கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி பகுதிக்குட்பட்ட கடைகளுக்கு முறையாக சொத்து வரி செலுத்துமாறு பலமுறை அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நீண்டகாலமாக சொத்துவரி நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சில கடைகளுக்கு முறையாக சொத்துவரி செலுத்துமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடைகளை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் இது தொடா்பாக வலுவான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் சொத்துவரி நிலுவை வைத்துள்ளோா் உரிய காலத்தில் செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என்றனா்.
