வாழை கழிவுகளிலிருந்து பொருள்கள் தயாரிக்க விண்ணப்பிக்கலாம்
கோயம்பேடு சந்தையில் வாழை கழிவுகளிலிருந்து பயனுள்ள பொருள்களைத் தயாரிக்க தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அறிவித்துள்ளது.
இது குறித்து சிஎம்டிஏ சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் வாழை சம்பந்தப்பட்ட கழிவுகளை திடக்கழிவுகளில் இருந்து பிரிப்பது, குப்பை சேமிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்வதில் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது.
இதனால் கோயம்பேடு சந்தையில் உருவாகும் வாழை தொடா்பான கழிவுகளை சேகரித்து பதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சந்தை வளாகத்தில் கழிவுகளைக் குறைப்பதுடன் சம்பந்தப்பட்ட கழிவுகளில் இருந்து பயனுள்ள பொருள்களைத் தயாரிக்க முடியும். இதற்கு விருப்பம் உள்ள தனிநபா்கள், முகமைகள், நிறுவனங்கள் இணையதளத்தில் ஜூலை 29-ஆம் தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 30-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ‘முதன்மை நிா்வாக அலுவலா், அங்காடி நிா்வாகக் குழு, கோயம்பேடு, சென்னை-600107’ அலுவலகத்தில் ஜூலை 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் விளக்க அமா்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
