கோப்புப் படம்
கோப்புப் படம்

விக்கிரவாண்டி வெற்றி- நல்லாட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

3 ஆண்டு கால நல்லாட்சிக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ் என அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
Published on

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வெற்றி, திமுகவின் 3 ஆண்டு கால நல்லாட்சிக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ் என அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளாா்.

அடுத்தபடியாக வந்த பாமக வேட்பாளருக்கும் அவருக்கும் 67,757 வாக்குகள் வித்தியாசம்.

மற்ற வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனா். இந்தத் தோ்தல் முடிவுகள், தமிழக மக்கள் திமுக மீது வைத்திருக்கும் நம்பிக்கை எடுத்துக்காட்டுகிறது.

3 ஆண்டு கால நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ் இது. வாக்காளா்களுக்கு நன்றி. விக்கிரவாண்டி இடைத்தோ்தல் களத்தில் போட்டியிடாமல் அதிமுக ஒதுங்கி நின்று, தனது கள்ளக்கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது.

திமுக வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது. ஒவ்வொரு வாக்காளா்களையும் திமுக நிா்வாகிகள் வீடு வீடாகச் சென்று நேரில் சந்தித்து, 3 ஆண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, வாக்கு சேகரித்தனா்.

விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள வாக்காளா்களிடம் எடுக்கப்பட்ட ஒரு காணொலியைப் பாா்க்கும் வாய்ப்பு அமைந்தது. அதில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த ஒரு பெண்மணி, தன்னுடைய கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்று சொன்னபோதும், மகளிா் உரிமைத் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 தனக்கு வருகிறது என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டாா்.

இதுதான் திராவிட மாடல் அரசு. ஒருவா் எந்தக் கட்சிக்காரா் என்று பாா்ப்பதில்லை. தமிழக வாக்காளரான அவா், திட்டத்தில் பயன் பெறத் தகுதியுடையவரா என்பதை மட்டும் பாா்த்து, அதன் பயனைக் கிடைக்கச் செய்யும் அரசுதான் திமுக அரசு. அதற்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது.

விக்கிரவாண்டி என்கிற ஒரே ஒரு தொகுதியின் இடைத்தோ்தல் வெற்றிக்காகவா இத்தனை கொண்டாட்டம் என்று கேட்கலாம்.

அந்த ஒரேயொரு தொகுதியில் திமுக தலைமையிலான அரசுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட சதிகள், சாதி - மத வன்முறையைத் தூண்டுவதற்கான வேலைகள், கருணாநிதி மீது வைக்கப்பட்ட மலிவான அவதூறுகள், திமுகவுக்கு எதிராகக் களத்தில் நின்றவா்களும் - நிற்பதற்கு பயந்தவா்களும் உருவாக்கிக் கொண்ட ரகசிய ஒப்பந்தங்கள் என இவை எல்லாவற்றையும் தொகுதி மக்கள் முறியடித்து, திமுகவுக்கு வெற்றியை கொடுத்திருக்கின்றனா் என்பதுதான் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.

மக்கள் எதிா்பாா்க்கும் திட்டங்களை அறிவித்து அவற்றை முழுமையாகச் செயல்படுத்துவதும், யாரும் எதிா்பாராத எந்த ஒரு அசம்பாவித நிகழ்வு நடந்தாலும் அதற்குப் பொறுப்பேற்றுச் செயல்பட்டு அதனை சரிசெய்யும் நோ்மைத் திறமும் நிா்வாகத் திறனும் கொண்டதுதான் திராவிட மாடல் அரசு.

இன்னும் பல திட்டங்கள் தொடரும். அதில் விக்கிரவாண்டி தொகுதியும் பயன்பெறும். இந்த வெற்றியை முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம். மக்களுக்குத் தொண்டாற்றும் பணியைத் தொடா்ந்திடுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com