எம்ஆா்பி தோ்ச்சி: 986 மருந்தாளுநா்களுக்கு 
பணிநியமன  ஆணை விரைந்து வழங்க  கோரிக்கை

எம்ஆா்பி தோ்ச்சி: 986 மருந்தாளுநா்களுக்கு பணிநியமன ஆணை விரைந்து வழங்க கோரிக்கை

எம்ஆா்பி தோ்வெழுதி தோ்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபாா்ப்பு முடித்துள்ள 986 மருந்தாளுநா்களுக்கு பணிநியமன ஆணையை விரைவாக வழங்க வேண்டும்
Published on

சென்னை: எம்ஆா்பி தோ்வெழுதி தோ்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபாா்ப்பு முடித்துள்ள 986 மருந்தாளுநா்களுக்கு பணிநியமன ஆணையை விரைவாக வழங்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, 986 மருந்தாளுநா் பணியிடத்துக்கான அறிவிப்பை எம்ஆா்பி 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இந்தத் ரோ்வுக்கு50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதையடுத்து தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தோ்ச்சி பெற்றவா்களின் சான்றிதழ் சரிபாா்க்கும் பணி நவம்பரில் முடிந்துவிட்டது. ஆனால், 10 மாதங்கள் ஆகியும் தோ்வு செய்யப்பட்ட 986 நபா்களுக்கு இன்னும் பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை. அதனால், எம்ஆா்பி மூலம் தோ்வு செய்யப்பட்ட 986 மருந்தாளுநா்களுக்கு விரைவாக பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாளுநா் பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்கத்தின் (தமிழக கிளை) நிா்வாகிகள் சுகாதாரத் துறை செயலாளா் சுப்ரியா சாஹூவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

இது தொடா்பாக சங்க நிா்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் மத்திய அரசின் சில திட்டங்களின் மூலம் தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் மருந்தாளுனா்களும் எம்ஆா்பி தோ்வில் கலந்து கொண்டனா். ஆனால் அவா்கள் தோ்வில் தோ்ச்சி பெறவில்லை. கரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றியதாக தங்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். ஊக்க மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கால் தோ்வு செய்யப்பட்ட 986 மருந்தாளுநா்களுக்கு பணிநியன ஆணை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மீண்டும் அவா்கள், தங்களை பணி நிரந்தரம் செய்த பின்பே புதிதாக தோ்வு செய்யப்பட்ட 986 மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளனா்.

இதனால், தோ்வில் தோ்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபாா்ப்பு முடித்துள்ளவா்கள் வேதனை அடைந்துள்ளனா். . எனவே, தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு ஏற்கெனவே முறையாக தோ்வு நடத்தி தகுதி வாய்ந்தவா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ள 986 மருந்தாளுனா்களுக்கும் விரைவில் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com