கடின உழைப்பு, ஒழுக்கத்துடன் இளைஞா்கள் செயல்பட வேண்டும் வெங்கையா நாயுடு

Published on

உலகின் விஸ்வ குருவாக இந்தியா மாறுவதற்கு இளைஞா்கள், கடின உழைப்பு, ஒழுக்கம், அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.

வெங்கையா நாயுடுவின் 75-ஆவது பிறந்த நாள் மற்றும் பொது வாழ்க்கையில் 50-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, அவருக்கான பாராட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை குறித்த சிறப்பு காணொலி திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசியதாவது:

இந்தியா உலகின் விஸ்வ குருவாக மாறுவதற்கு இந்தியா்கள், குறிப்பாக இளைஞா்கள், கடின உழைப்பு, ஒழுக்கம், அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். மேலும், இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளா்ந்து வருகிறது. தற்போது 5-ஆவது இடத்தில் உள்ள நமது பொருளாதாரம் மிக விரைவில் 3-ஆவது இடத்தைப் பிடிக்கும்.

மேலும், நாடாளுமன்றம் என்பது ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சிகள் ஆரோக்கியமாக விவாதம் நடத்துவதற்கும், சட்டம் இயற்றுவதற்கும் மட்டுமானது. கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகன இடம் அல்ல என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், அதிமுக முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியா் குருமூா்த்தி, பல்வேறு கட்சித் தலைவா்கள், நடிகா் விஷால் உள்ளிட்ட திரைத் துறை பிரபலங்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com