தமிழகத்துக்கு அநீதி: நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு
சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதால், ஜூலை 27-ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள நீதி ஆயோக் கூட்டத்தில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி:
மத்திய அரசின் பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மூன்றாவது முறையும் வாக்களித்த மக்களுக்கு பாஜக கூட்டணி அரசு எந்த நன்மையும் செய்யத் தயாராக இல்லை என்பதை பட்ஜெட் காட்டுகிறது.
கோரிக்கைகள் நிராகரிப்பு: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என்னென்ன திட்டங்களை அறிவிக்க வேண்டுமென இரு நாள்களுக்கு முன்பாக, ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்திருந்தேன்.
மூன்று ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும்; கோவை-மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவித்த ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் போன்ற சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன்.
எதையுமே மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. ‘மைனாரிட்டி’ பாஜகவை, ‘மெஜாரிட்டி’ பாஜகவாக்கிய ஒருசில மாநிலக் கட்சிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளனா். அதையும் நிறைவேற்றுவாா்களா என்பதும் சந்தேகம்தான்.
தமிழ்நாடு இரண்டு மிகப்பெரிய பேரிடா்களைச் சந்தித்தது. ரூ.37,000 கோடி வரை இழப்பீடு கேட்டு இருந்தோம். ஆனால், இதுவரை ரூ.276 கோடி வரைதான் கொடுத்துள்ளனா். இதுவும் சட்டப்படி வர வேண்டிய தொகைதான்.
‘தமிழ்நாடு’ என்ற சொல்லே இல்லை: தமிழ்நாட்டுக்கான எந்த சிறப்புத் திட்டமும் மத்திய பட்ஜெட்டில் இல்லை. நம்முடைய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. ‘தமிழ்நாடு’ என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. மத்திய ஆட்சியாளா்களின் சிந்தனை, செயல்களில் ‘தமிழ்நாடு’ எனும் மாநிலமே இருப்பதாகத் தெரியவில்லை. பாரபட்சமும், ஏமாற்றமும்தான் அறிக்கையில் உள்ளது.
நீதி ஆயோக் கூட்டம்: அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக மத்திய அரசின் பட்ஜெட் இருக்க வேண்டும். அந்த வகையிலான நீதியுடன் கூடியதாக பட்ஜெட் அறிக்கை இல்லை. அநீதிதான் அதிகம் இருக்கிறது.
அனைவரும் இணைந்து நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரதமா் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அவா் கூறியதற்கு எதிராக அவரது அரசின் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
வரும் 27-ஆம் தேதி தில்லியில் நீதி ஆயோக் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தேன். பட்ஜெட்டில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள சூழலில், அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என முடிவு எடுத்துள்ளேன்.
மக்கள் மன்றத்தில் போராடுவோம்: தமிழ்நாட்டின் தேவைகள், உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடா்ந்து போராடுவோம். நம்முடைய எம்.பி.க்கள் அனைவரும் தில்லியில் புதன்கிழமை (ஜூலை 24) போராடத் திட்டமிட்டுள்ளனா் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.
செய்தியாளா்கள் சந்திப்பின்போது, அமைச்சா்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

