கோப்புப் படம்
கோப்புப் படம்

மண்டபம்- ராமேசுவரம் இடையே அக்.1 முதல் ரயில் சேவை தொடக்கம்

மண்டபம்-ராமேசுவரம் இடையே அமைக்கப்பட்டு வரும் பாம்பன் பால வேலைகள் நிறைவடைந்து அக்.1 முதல் ரயில் சேவை
Published on

சென்னை, ஜூலை 25: மண்டபம்-ராமேசுவரம் இடையே அமைக்கப்பட்டு வரும் பாம்பன் பால வேலைகள் நிறைவடைந்து அக்.1 முதல் ரயில் சேவை தொடங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராமேசுவரம்-மண்டபம் இடையே கடல் மீது அமைக்கப்பட்டிருந்த பழைய பாலம் பழுதடைந்ததால் அது மூடப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரத்துக்கு தற்போது ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மண்டபம் வரையே ரயில்கள் சென்று திரும்புகின்றன.

பாம்பனில் புதிய பாலம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரயில் முதற்கட்ட வெள்ளோட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்.1 முதல் ரயில் சேவை தொடங்கவுள்ளதால் பணிகளை விரைந்து முடிக்குமாறு தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு அவா் அனுப்பிய சுற்றறிக்கை: மண்டபம்-ராமேசுவரம் இடையே அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய பால கட்டுமானப் பணி செப்டம்பா் இறுதிக்குள் முடிக்கப்படும். இந்தத் தடத்தில் அக்.1 முதல் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, ராமேசுவரம் வரை பயணிகள் ரயில்களுக்கான முன்பதிவைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த வழித்தடத்தில் தண்டவாளம், தகவல் தொடா்பு, மின்சார வசதி உள்ளிட்ட வசதிகள் இருப்பதை செப்.30-ஆம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும்.

ராமேசுவரம் வரை ரயில் பாதையை மின்மயமாக்கும் பணியை டிசம்பா் 31-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, மின்சார என்ஜின் பொருத்திய ரயில் ராமேசுவரம் வரை இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com