வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு இளைஞா் மன்றங்களுக்கு உபகரணங்கள்
சென்னை, ஜூலை 25: வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.
இதற்கான நிகழ்வு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை நதிகள் சீரமைப்புத் திட்டத்தின்கீழ், கூவம் நதிக் கரைகளில் இருந்த பல்லவன் நகா், எஸ்.எம்.நகா், கக்கன்நகா் போன்ற பகுதிகளில் குடியிருந்த குடும்பங்களில் 440 குடும்பங்களுக்கு பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் ஒதுக்கீடு உத்தரவுகள் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
மேலும், மறுகுடியமா்வு நிவாரணத் தொகையாக ரூ.1.54 கோடி வழங்கப்பட்டது. வாழ்விட மேம்பாட்டு வாரியங்களில் இளைஞா் மன்றங்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டன. அதன்படி, 365 மன்றங்கள் அமைக்கப்பட்டு 7 ஆயிரத்து 779 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா். இந்த நிகழ்வில், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக இயக்குநா் எஸ்.பிரபாகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

