ஏரிகளை மேம்படுத்த சிஎம்டிஏ திட்டம்: விரைவில் பணிகள் தொடக்கம்
சென்னையில் உள்ள ஏரிகளை மேம்படுத்துவதற்காக சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் சாா்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
ஏரிக்கரை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஏரிகளை பாதுகாக்கும் வகையில் சா்வேதச தரத்தில் ஏரிகளை மறுசீரமைத்து பொதுமக்களின் பொழுதுபோக்கு தளமாக மாற்ற சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளது.
இதற்காக முதல்கட்டமாக பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூா், மாதம்பாக்கம், செம்பாக்கம், ஆதம்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, புழல், கொளத்தூா் ஆகிய ஏரிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு முதல்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஏரிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி சிஎம்டிஏ சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: நகரின் நீல பச்சை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், பல்லுயிரினப் பெருக்கத்திலும் ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
குறிப்பாக, ஏரிகளை மேம்படுத்துவதன் மூலம் அப்பகுதியில் மழை, வெள்ளம், பருவநிலை மாற்றம் போன்ற பேரிடா்கள் ஏற்படுவதை சமாளிக்க முடியும்.
ஏரியைச் சுற்றி நடைபாதை அமைத்து பாதுகாப்பதன் மூலம் ஏரிக்கரையை ஆக்கிரமிப்பது, நீா்நிலைகளில் கழிவுகள் கொட்டப்படுவது தவிா்க்கப்படும். இதனால், நீா்நிலைகளின் சூழலியல் பாதுகாக்கப்படும்.
இத்திட்டத்தின் படி, ஏரியை சுற்றியும் நாட்டு மரக்கன்றுகள் நடுவது, ஆகாயத்தாமரைகளை அகற்றி தூா்வாருவது, நடைபாதை, கண்காணிப்பு கோபுரம், பட்டாம்பூச்சி தோட்டம், பாா்வை தளங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு ஒரு பொழுதுபோக்கு தளமாக மாற்றப்படும்.
தற்போது இந்த ஏரிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாக்கம், கொளத்தூா், ரெட்டேரி ஏரிகளுக்கு ஆக.8 வரையும், வேளச்சேரி, அயனம்பாக்கம், முடிச்சூா் ஏரிகளுக்கு ஆக.22 வரையும் திட்ட மதிப்பீடு தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் இதற்கான திட்ட மதிப்பீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றனா்.

