திருப்பதி செல்லும் ரயில் இன்று திருத்தணியுடன் நிறுத்தம்
சென்னை: அரக்கோணம் பணிமனையில் புதன்கிழமை (ஜூலை 31) பராமரிப்பு பணி நடைபெறுவதால் திருப்பதி செல்லும் ரயில் திருத்தணியுடன் நிறுத்தப்படும்.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அரக்கோணம் பணிமனையில் புதன்கிழமை காலை 11.10 முதல் பகல் 1.10 மணி வரை பராமரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் திருத்தணியுடன் நிறுத்தப்படும்.
மேலும், அரக்கோணத்துக்கு காலை 9.10 மற்றும் 11 மணிக்கு புறப்படும் ரயில், திருத்தணிக்கு காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் திருவள்ளூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக அரக்கோணத்தில் இருந்து காலை 11.15, பகல் 12 மணிக்கும், திருத்தணியில் இருந்து பகல் 12.35 மணிக்கும் புறப்படும் ரயில்கள் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு சென்ட்ரல் வரும். அதுபோல் வேலூரில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் சித்தேரியுடன் நிறுத்தப்படும்.
ஆவடி, பட்டாபிராம்:
ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் ஆவடி, பட்டாபிராமிடையே இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் புதன்கிழமை (ஜூலை 31) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு புதன்கிழமை இரவு 11.50 மணிக்கும், மறுமாா்க்கமாக வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும். மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு இரவு 11.40 மணிக்கும், நள்ளிரவு 12.05 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராமுக்கு இரவு 10.40 மணிக்கு புறப்படும் ரயில் ஆவடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக பட்டாபிராமில் இருந்து இரவு 10.45, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு புறப்படும் ரயில்கள் ஆவடியில் இருந்து புறப்பட்டு சென்ட்ரல் வந்தடையும்.
சூலூா்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இரவு 9 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் கொருக்குப்பேட்டை, வியாசா்பாடி வழியாக ஆவடி சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
