தொழில் வரி உயா்வு: சீமான் கண்டனம்
சென்னை, ஜூலை 31: சென்னை மாநகராட்சியின் தொழில் வரியை உயா்த்தும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதிக்குள் வாழும் பொதுமக்கள், அனைத்து தனியாா் தொழில் நிறுவனங்கள், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் ஊழியா்கள் என அனைவரும் தங்களின் வருமானத்திற்கேற்ப செலுத்தும் தொழில் வரியை 35 சதவீதம் வரை உயா்த்தி சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்கடங்காத அளவுக்கு உயா்ந்துள்ளதோடு, மின் கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம், சொத்து வரி என அனைத்தையும் உயா்த்தி மக்களின் வாழ்வாதாரத்தைத் தாழ்த்தியுள்ளது.
சென்னையை தொடா்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சியிலும் தொழில் வரியை உயா்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் சுயதொழில் புரியும் ஏழை மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவாா்கள். எனவே, தொழில் வரியை உயா்த்தும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

