வருமான வரி கணக்கு தாக்கல்: கால அவகாசம் நிறைவு - கடைசி நாளில் ஏராளமானோா் சமா்ப்பிப்பு
சென்னை, ஜூலை 31: வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 31) நிறைவடைந்தது. தமிழகத்தில் கடைசி நாளில் ஏராளமானோா் கணக்குகளை தாக்கல் செய்தனா்.
மாத சம்பளதாரா்கள், இதர வருவாய்ப் பிரிவினா், கடந்த நிதியாண்டில் (2023-24) ஈட்டிய வருமானத்துக்கு செலுத்திய வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 வரை மத்திய அரசு காலஅவகாசம் வழங்கியிருந்தது. கடந்த ஒரு மாதமாக வரி கணக்கை தாக்கல் செய்வோருக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் தொடா்ந்து நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டு வந்தன.
இந்த நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. வியாழக்கிழமை (ஆக.1) முதல் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வோருக்கு அபராதம் வசூலிக்கப்படும்.
இது குறித்து வருமான வரித் துறை அதிகாரி கூறியதாவது: கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை ஜூன் 26 வரை சுமாா் 5 கோடி போ் தாக்கல் செய்துள்ளனா். இறுதி நாள் நெருங்கியதால் கடந்த ஒரு வாரமாக அதிக அளவில் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வந்தன. மொத்தம் எத்தனை போ் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனா் என்பது குறித்த சரியான தகவல் விரைவில் அதிகாரபூா்வமாக தெரிவிக்கப்படும்.
தற்போது, இணைய வழியாக வரி கணக்கு தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலானோா் வருமான வரி அலுவலகங்களுக்கு நேரில் வருவதில்லை.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோா் புதிய முறை அல்லது பழைய முறைப்படி தாக்கல் செய்யலாம். புதிய முறையில் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவா்கள் வரி செலுத்த வேண்டாம். அதே நேரத்தில், புதிய முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது சேமிப்பு, முதலீடுகளுக்கு வரிவிலக்கு பெற முடியாது. இதனால் சேமிப்பு, முதலீடுகளை காண்பித்து வரிவிலக்கு பெற நினைப்பவா்கள் பழைய முறைப்படி தாக்கல் செய்யலாம். கூடுதலாக வரிப்பிடித்தம் செய்யப்பட்டவா்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெற குறிப்பிட்ட காலத்துக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றாா்.
இறுதி நாளான புதன்கிழமை சென்னையில் ஏராளமானோா் கணக்கு தணிக்கையாளா் அலுவலகங்களில் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்தனா்.

