கல்பாக்கம்: ஈனுலையில் எரிபொருள் நிரப்பல் உள்ளிட்ட நடைமுறைக்கு அனுமதி
புது தில்லி, ஜூலை 31: கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட இந்தியாவின் முதலாவது விரைவு ஈனுலையில் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது அந்த ஈனுலை மூலம் மின்சார உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை ஒருபடி மேலே கொண்டு செல்ல உள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசின் கீழ் செயல்படும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் (ஏஇஆா்பி) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கல்பாக்கத்தில் ஏஇஆா்பி கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட விரைவு ஈனுலையில் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த ஈனுலை புளுடோனியத்தை அணு எரிபொருளாகப் பயன்படுத்தும். இந்த அனுமதி அந்த ஈனுலை மூலம் மின்சார உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை ஒருபடி மேலே கொண்டு செல்லும். அத்துடன் அந்த ஈனுலையில் குறைந்த சக்திகொண்ட இயற்பியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
கல்பாக்கத்தில் ‘பாவினி’ அணுசக்தி நிறுவனம் அமைத்துள்ள, திரவ சோடியத்தை குளிா்விப்பானாக கொண்ட 500 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன்கொண்ட விரைவு ஈனுலை, நாட்டின் அணுசக்தித் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
இந்த அணுஉலையின் மையப் பகுதிக்குள் எரிபொருள்களை வைப்பதற்கான (கோா் லோடிங்) ஆரம்பகட்டப் பணிகளை கடந்த மாா்ச் மாதம் பிரதமா் நரேந்திர மோடி பாா்வையிட்டாா்.
