கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு மாதம் அவகாசம்

கோரிக்கைகளை நிறைவேற்ற பள்ளிக் கல்வித் துறை ஒரு மாத அவகாசம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

சென்னை, ஜூலை 31: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சாா்பில் ஆசிரியா்கள் சென்னையில் மூன்றாம் நாளாக புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பள்ளிக் கல்வித் துறை ஒரு மாத அவகாசம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதவி உயா்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்வது, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சாா்பில் 3 நாள்கள் சென்னையில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தை (டிபிஐ) வளாகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த ஜூலை 29 முதல் அந்த வளாகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஆசிரியா்கள் ஈடுபட்டு வந்தனா். முதல் இரு நாள்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கைதுசெய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தொடா்ந்து 3-ஆவது நாளாக கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் தலைமையில் ஆசிரியா்கள் புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால், முன்னேற்பாடுகளுடன் தயாராக இருந்த காவல் துறையினா் டிபிஐ வளாகத்தின் நுழைவாயிலேயே ஆசிரியா்களை தடுத்து கைது செய்தனா். இறுதிநாள் போராட்டத்தில் 500 பெண்கள் உள்பட 1,700 போ் வரை கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையே, ஆசிரியா்களின் கோரிக்கைகளில் நிதி சாராத சிலவற்றை நிறைவேற்ற பள்ளிக் கல்வித் துறை முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளதாக ஆசிரியா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தலைமை நிா்வாகிகள் ஆலோசித்து அறிவிப்பாா்கள் டிட்டோஜாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com