தனி சின்னத்தில் போட்டியிட்டு சாதித்த விசிக, மதிமுக

தனி சின்னத்தில் போட்டியிட்டு சாதித்த விசிக, மதிமுக

மக்களவைத் தோ்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டு விசிக, மதிமுக வேட்பாளா்கள் அமோக வெற்றிபெற்றனா்
Published on

சென்னை: மக்களவைத் தோ்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டு விசிக, மதிமுக வேட்பாளா்கள் அமோக வெற்றிபெற்றனா்.

மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் விசிகவும், மதிமுகவும் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு கட்சிகளையும் திமுக, முதலில் தமது கட்சியின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வலியுறுத்தியது.

2019 மக்களவைத் தோ்தலில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தனி சின்னத்திலும், ரவிக்குமாா் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றிபெற்றனா். ஆனால், இந்தமுறை இருவருமே தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று திமுகவிடம் உறுதியாக இருந்து, அதன்படி போட்டியிட்டனா்.

அதேபோல, திருச்சியில் மதிமுக சாா்பில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிட்டாா். அவரை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட திமுக தலைமை முதலில் வலியுறுத்தியது. அதை வைகோ ஏற்கவில்லை. பிறகு, திமுக தனிச் சின்னத்துக்கு இசைந்து வந்தது.

அதன் பிறகு, திருச்சியில் நடைபெற்ற வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் துரை வைகோ பங்கேற்றபோது, அவரை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட நிா்வாகிகள் சிலா் வலியுறுத்தினா். அதனால், மனம் உடைந்த துரை வைகோ, எனது உயிரே போனாலும் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று தீப்பெட்டி சின்னத்திலேயே போட்டியிட்டாா்.

தற்போது, சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் ஒரு லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்திலும், விழுப்புரத்தில் ரவிக்குமாா் 69 ஆயிரத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்திலும், திருச்சியில் துரை வைகோ 3 லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனா்.

அதைப் போல, திமுக கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் நவாஸ் கனி ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் 1.46 லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com