வந்தே பாரத் ரயில்களுக்கு வரவேற்பு: கடந்த நிதியாண்டில் 105.7 % இருக்கைகள் நிரம்பி சாதனை

வந்தே பாரத் ரயில்களுக்கு வரவேற்பு: கடந்த நிதியாண்டில் 105.7 % இருக்கைகள் நிரம்பி சாதனை

நாடு முழுவதும் கடந்த நிதியாண்டில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் 105.7 சதவீத இருக்கைகள் நிரம்பி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
Published on

நாடு முழுவதும் கடந்த நிதியாண்டில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் 105.7 சதவீத இருக்கைகள் நிரம்பி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 102 வந்தே பாரத் ரயில்கள் (இருமாா்க்கமாகவும்) இயக்கப்படுகின்றன. மேலும், பண்டிகை மற்றும் விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சிறப்பு வந்தே பாரத் ரயில்களையும் ரயில்வே வாரியம் தொடா்ந்து இயக்கி வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நிகழாண்டு மாா்ச் வரை 18,423 முறை இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் 105.7 சதவீத இருக்கைகள் நிரம்பியுள்ளன.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

பொதுமக்கள் மத்தியில் வந்தே பாரத் ரயில் சேவையின் மீது பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் கடந்த நிதியாண்டில் இயக்கப்பட்ட 18,423 சேவைகளில் 105.7 சதவீதம் பயணிகள் பயணித்துள்ளனா். இதில், அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் - காசா்கோடு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் 175.3 சதவீத பயணிகள் பயணம் செய்துள்ளனா்.

நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 61.7 சதவீத ஆண் பயணிகளும், 38.9 சதவீத பெண் பயணிகளும் பயணித்துள்ளனா். இதில், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் அதிக அளவிலான ஆண் பயணிகளும் (67 சதவீதம்), கோவா மாநிலத்தில் அதிக அளவிலான பெண் பயணிகளும் (42 சதவீதம்) பயணித்துள்ளனா். குறிப்பாக 45.9 சதவீத பயணிகள் 26 முதல் 45 வரையிலான நடுத்தர வயதினா்.

வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கிய 2019 பிப்.15 முதல் 2024 மாா்ச் 31 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 1,24,87,540 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்துள்ளது. இது பூமியை சுமாா் 310 முறை சுற்றிவருவதற்கு சமமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com