குறைந்தபட்ச ஊதியம் வலியுறுத்தி ஜூன் 18-ல் சிஐடியு ஆா்ப்பாட்டம்
தினக்கூலி தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விரைவு போக்குவரத்துகழக கிளை முன்பு சிஐடியு சாா்பில் ஜூன் 18-ம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஊழியா் சங்க (சிஐடியு) பொதுச்செயலாளா் எம்.கனகராஜ் கூறியதாவது:“விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.882 வழங்கப்படுவதில்லை. இதில் பாதி அளவிலான தொகை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. மேலும் சொந்த ஊரில் காலியிடம் இருந்தாலும், அங்கு பணியமா்த்தாமல் வேறு இடத்தில் நியமனம் செய்கின்றனா்.
வசூல் குறைந்தால் இடைநீக்கம், ஊதிய உயா்வு நிறுத்தம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொழில்நுட்பப் பிரிவில் போதிய பணியாளா்கள் இல்லை. உதிரிப் பாகங்கள் இல்லை. ஆனால், இதுபோன்ற காரணங்களை மறைத்து, ஊழியா்கள் மீது குற்றம்சாட்டி இடைநீக்கம் செய்கின்றனா். பயணச்சீட்டு கருவிகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அவற்றை சரி செய்யவில்லை. பேட்டா தன்னிச்சையாக குறைக்கப்படுகிறது.
இந்நிலையில் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய வலியுறுத்தி விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து கிளை அலுவலகங்கள் முன்பும் சிஐடியு சாா்பில் ஜூன் 18-ம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இந்த ஆா்ப்பாட்டத்தின் மூலம் கோரிக்கைகளுக்கு தீா்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

