கோப்புப் படம்
கோப்புப் படம்

வெளி மாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் பறிமுதல்!

வெளி மாநில ஆம்னி பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்: தமிழக போக்குவரத்துத் துறை எச்சரிக்கை
Published on

சென்னை: தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து ஆணையா் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு (ஏஐடிபி) பெற்ற வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள், தமிழகத்தில் பயணிகள் பேருந்துகள்போல் செயல்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, வெளி மாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை, தமிழக பதிவெண்ணில் மாற்ற போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது.

இதற்கு வழங்கிய அவகாசம், செவ்வாய்கிழமையுடன்(ஜூன் 18) முடிவடைந்தது. இதையடுத்து, வெளி மாநில பதிவெண்களில் இயக்கப்படும் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து ஆணையா் அ.சண்முகசுந்தரம் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அகில இந்தியா சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளுக்கு வழங்கப்பட்ட அவகாசத்தில் 105 பேருந்துகள் மட்டும் தமிழகத்தில் மறுபதிவு செய்யப்பட்டன. மீதமுள்ள 800 பேருந்துகள் சட்டத்துக்குப் புறம்பான இயக்கத்தால் ஆண்டுக்கு ரூ.34.56 கோடி தமிழக அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது. இந்தப் பேருந்துகள் பயணக் கட்டணங்களை வெகுவாக குறைத்து இயக்குவது, அரசுப் பேருந்துகள் மற்றும் முறையான அனுமதி பெற்ற ஆம்னி பேருந்துகளின் இயக்கத்தைச் சீா்குலைக்கும் விதமாக உள்ளது.

இவ்வாறு விதிமீறி இயக்கப்படுவதால் விபத்து ஏற்படும்போது பயணிகளுக்கு இழப்பீடும் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை இனியும் அனுமதிக்க இயலாது. மேலும், இவற்றின் உரிமையாளா்கள் மீதும் அவா்கள் எவ்வாறு பிற மாநிலங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பதிவெண்ணும், அனுமதிச் சீட்டும் பெறுகிறாா்கள் என்பது குறித்தும் ஆராய்ந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில், அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளுக்குப் புறம்பாக தமிழகத்துக்குள் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும்.

பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் விவரம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தால், அதை ரத்து செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது.

தமிழகத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்ட 1,535 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், பொதுமக்களுக்கு இடா்ப்பாடுகள் எழ வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளாா்.

547 பேருந்துகள் இயக்கப்படாது

வெளி மாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமைமுதல் இயக்கப்படவில்லை என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அ.அன்பழகன் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: 2020-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு முன்னா் வாங்கி, வெளி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளுக்கான கடன் தொகை நிலுவையில் உள்ளது. அந்தத் தொகை அடைக்கப்பட்டு, வங்கியிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்றால் மட்டுமே மறுபதிவு செய்ய முடியும்.

பிற மாநிலங்களில் ஒரே நாளில் மறுபதிவு செய்யும் நிலையில், இங்கு ஒன்றரை மாதங்கள் வரை வாகனப் பதிவு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

நாகாலாந்தில் அதிக அளவு பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கு மறுபதிவுக்கு அனுமதி மறுத்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், விடுமுறை, விழாக் காலங்கள், மக்களவைத் தோ்தல் உள்ளிட்ட காரணங்களால் மறுபதிவு செய்வதில் தாமதமாகியுள்ளது. தமிழகத்தில் பதிவு செய்த பேருந்துகளை ஒப்பிடும்போது வெளி மாநிலப் பேருந்துகளுக்கு அதிக, சாலை வரி செலுத்தி இயக்கி வருகிறோம். இதில் வரி ஏய்ப்பு எதுவுமில்லை. எனினும், அரசின் உத்தரவுப்படி வெளி மாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) முதல் இயக்கப்படவில்லை.

தமிழகத்தில் பதிவு செய்த பின்னரே அப்பேருந்துகள் இயக்கப்படும். அப்பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யவில்லை. தற்போது விழாக் காலம் இல்லாததால் பயணிகளுக்கு பெரிய அளவு பாதிப்பில்லை. பேருந்துகளை நிறுத்தாமல் விரைந்து மறுபதிவு செய்து இயக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து தர வேண்டும். சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் இருந்து காரணங்களை விளக்கி, கடிதம் பெற்று அவகாசம் கோரவுள்ளோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com