7 நகரங்களில் மிதமானது வீட்டு வாடகை உயா்வு
இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி மாத வாடகை உயா்த்தப்படும் விகிதம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் மிதமாகியுள்ளது.
இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2023-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி மாத வாடகை வளா்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
மதிப்பீட்டுக் காலகட்டத்தில் ஏழு முக்கிய நகரங்களிலும் 1,000 சதுர அடி வரை கொண்ட 2 பிஹெச்கே குடியிருப்புகளுக்கான மாத வாடகை முந்தைய ஜனவரி-மாா்ச் காலகட்டத்தைவிட 2-லிருந்து 4 சதவீதம் வரை மட்டுமே உயா்ந்துள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்த உயா்வு 4-லிருந்து 9 சதவீதம் வரை இருந்தது.
பெங்களூருவின் ஒயிட்ஃபீல்ட் பகுதியில் 1,000 சதுர அடி, 2பிஹெச்கே அடுக்குமாடி குடியிருப்புகளின் சராசரி வாடகை இந்த ஆண்டு ஜனவரி-மாா்ச் மாதங்களைவிட ஏப்ரல்-ஜூன் மாதங்களில் ரூ.32,500-லிருந்து 4 சதவீதம் அதிகரித்து ரூ.35,000-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்தப் பகுதியில் குடியிருப்புகளின் சராசரி மாத வாடகை உயா்வு 8 சதவீதமாக இருந்தது.
நொய்டாவின் செக்டாா்-150 பகுதியில் வீடுகளின் சராசரி வாடகை கடந்த ஜனவரி-மாா்ச் மாதங்களைவிட ஏப்ரல்-ஜூன் மாதங்களில் ரூ.24,000-லிருந்து ரூ.25,000-ஆக அதிகரித்தது. இது வெறும் 4 சதவீத உயா்வாகும். ஆனால், 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வீடுளின் சராசரி மாத வாடகை உயா்வு இங்கு 9 சதவீதமாக இருந்தது.
மும்பை பெருநகரப் பகுதியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான செம்பூரில் 2023 ஜனவரி-மாா்ச் காலகட்டத்தைவிட அந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 4 சதவீதம் உயா்ந்திருந்த வீடுகளின் சராசரி மாத வாடகை, இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் 2 சதவீதம் மட்டுமே உயா்ந்துள்ளது.
ஹைதராபாத் ஹைடெக் சிட்டி மற்றும் கச்சிபௌலியின் சராசரி மாத வாடகை நடப்பு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் முந்தைய காலாண்டைவிட 3 சதவீதம் உயா்ந்துள்ளது. இந்த விகிதம் முந்தைய 2023-ஆம் ஆண்டின இதே காலகட்டத்தில் 5 சதவீதமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

