காமராஜா் பிறந்த நாள்: கல்வி வளா்ச்சி தினமாக பள்ளிகளில் கொண்டாட அறிவுறுத்தல்
முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதியை கல்வி வளா்ச்சி தினமாக அனைத்து பள்ளிகளும் கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி கல்வி வளா்ச்சி தினமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் பள்ளிகளில் விழாக்கள் நடத்தி காமராஜா் படத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த முறையும், ஜூலை15-ஆம் தேதி அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளா்ச்சி தின விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவா்கள் உணரும் வகையில் பேச்சு, ஒவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும்.
இதற்கான செலவினங்களை பள்ளிகளின் பெற்றோா் - ஆசிரியா் கழகத்தின் நிதியில் இருந்து பயன்படுத்த வேண்டும்.
இது தொடா்பாக பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.
மற்றொருபுறம், மாணவா் சோ்க்கை, கற்பிக்கும் திறன் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்படும். அவற்றை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

