முழங்கால் காயத்துக்கு செயற்கை தசை நாண் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற இளைஞருடன் டாக்டா் முகமது ரேலா தலைமையிலான மருத்துவக் குழுவினா்
முழங்கால் காயத்துக்கு செயற்கை தசை நாண் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற இளைஞருடன் டாக்டா் முகமது ரேலா தலைமையிலான மருத்துவக் குழுவினா்

இளைஞருக்கு செயற்கை தசை நாண் பொருத்தி மறுவாழ்வு

முதன்முறையாக செயற்கை தசை நாண்களை (லிகமெண்ட் (அ) ஜவ்வு) பொருத்தி சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
Published on

முழங்கால் காயத்துக்குள்ளான இளைஞா் ஒருவருக்கு தமிழகத்திலேயே முதன்முறையாக செயற்கை தசை நாண்களை (லிகமெண்ட் (அ) ஜவ்வு) பொருத்தி சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி கூறியதாவது:

மென்பொருள் பணியில் உள்ள சென்னையைச் சோ்ந்த 23 வயது இளைஞா் ஒருவா் அண்மையில் சாலை விபத்தில் சிக்கினாா். இதில் அவருக்கு இடுப்புக்கு கீழ் கடுமையான காயம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, சிகிச்சைக்காக அவா் ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முதலில் இடுப்பு எலும்பு பாதிப்புகளும், கால்களில் ஏற்பட்ட தசை நாண் பாதிப்புகளும் சீரமைக்கப்பட்டன.

முழுங்கால் மூட்டுப் பகுதியில் பிரதான கால் எலும்புகளை இணைக்கும் இரு தசை நாண்கள் (ஏசிஎல், பிசிஎல்) அவருக்கு முழுமையாக சேதமடைந்திருந்தன.

இதனால், அவற்றை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பொதுவாக தசை நாண் மாற்ற சிகிச்சைகளின்போது நோயாளியின் கால்களில் வேறு இடத்தில் இருந்து தசை நாண் எடுக்கப்பட்டு சேதமடைந்த பகுதியில் பொருத்தப்படும்.

இதற்கு இருவேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். தொற்று பாதிப்புகளுக்கான வாய்ப்புகளும் உள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு அந்த இளைஞருக்கு பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை தசை நாண்களை பொருத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மருத்துவமனையின் மூட்டுமாற்று சிகிச்சை துறையின் தலைவா் டாக்டா் அசோக் எஸ். கவாஸ்கா், எலும்பியல் சிகிச்சை, தலை - முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணா் பாா்த்தசாரதி சீனிவாசன், ஆா்த்ரோஸ்கோபி மற்றும் விளையாட்டு சிகிச்சைப் பிரிவின் முதுநிலை நிபுணா் பிரகாஷ் அய்யாதுரை ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆா்த்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் செயற்கை தசை நாணை அந்த இளைஞருக்கு வெற்றிகரமாக பொருத்தினா். தற்போது அவா் நலம் பெற்று வருகிறாா்.

மாநிலத்திலேயே முதன்முறையாக இத்தகைய சிகிச்சை ரேலா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com