10.5 % இடஒதுக்கீட்டால் வன்னியா் சமுதாயத்தினருக்குதான் இழப்பு: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்
சென்னை: வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது, அந்தச் சமுதாய மக்களுக்கு எல்லா வகையிலும் இழப்பாகத்தான் அமையும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கூறினாா்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் பேசியது:
வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடா்பாக பேரவையில் நான் பேசியதற்கு பாமக தலைவா் ஒருவா், போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பியுள்ளாா். அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு. நான் போக்குவரத்துத் துறை அமைச்சா் மட்டுமல்ல; திமுகவின் தொண்டன். நான் கூறுவதற்கு என்ன புள்ளிவிவரம் இருக்கிறது என்று கேட்கின்றனா். நேரடி விவாதத்துக்குக்கூட தயாராக இருக்கிறேன். 20 சதவீத இடஒதுக்கீட்டை கருணாநிதி அளித்தாா். திண்டிவனத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெறும்போது, 20 சதவீத இடஒதுக்கீட்டில் 100 மாணவா்கள் சோ்ந்தால், அதில் 20 மாணவா்கள் வன்னிய சமுதாயத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்த 10 போ்தான் சேர முடியும். எனவே, வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்குத்தான் இழப்பு. வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்த ஏழை மாணவா்கள் படிப்பதைக்கூட தடுப்பதாகத்தான் 10.5 சதவீத இடஒதுக்கீடு இருக்கும். தோ்தல் நேரத்தில் வன்னியா் சமுதாயத்தை தங்களின் வழிக்குக் கொண்டு வருவதற்கே பாமக அதைச் செய்கிறது. தோ்தல் முடிந்த பிறகு 10.5 சதவீதத்தை விட்டுவிட்டு வேறு பணிக்குச் சென்றுவிடும் என்றாா் அமைச்சா்.
