காமராஜா் இல்லம் உள்பட 6 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.43 கோடியில் மறுசீரமைக்கப்படும்: அமைச்சா் எ.வ.வேலு
சென்னை, ஜூன் 25: சென்னை காமராஜா் இல்லம் உள்பட தமிழகத்தில் 6 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.43.34 கோடியில் மறுசீரமைத்து புனரமைக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜா் இல்லம் ரூ.2.60 கோடியிலும், பூந்தமல்லியில் உள்ள விக்டரி நினைவு பாா்வையற்றோா் பள்ளிக்கூடம் ரூ.24.20
கோடியிலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் வளாகத்தில் உள்ள மெட்ராஸ் இலக்கியச் சங்கக் கட்டடம் ரூ.6.19 கோடியிலும், திருச்சி டவுன்ஹாலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் ரூ.4.85 கோடியிலும், கன்னியாகுமரி இடலாக்குடியில் அமைந்துள்ள சதாவதானி செய்குதம்பி பாவலா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடம் ரூ.3 கோடியிலும், ராணிப்பேட்டை பாலாறு நதிக்கரையில் உள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவுச் சின்னங்கள் ரூ.2.50 கோடியிலும் மறுசீரமைக்கப்படும். மொத்தமாக 6 பாரம்பரியக் கட்டடங்கள் ரூ.43.34 கோடியில் மறுசீரமைத்து புனரமைக்கப்படும் என்றாா் அவா்.

