வன உரிமைச் சட்டத்தை விரைந்து செயல்படுத்த தனித் திட்டம்

வன உரிமைச் சட்டத்தை விரைந்து செயல்படுத்த புதிய திட்டம்
Published on

சென்னை: வன உரிமைச் சட்டத்தை விரைவாகவும், திறம்படவும் செயல்படுத்த தனித் திட்டம் வகுக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்:

வீடற்ற அழிவின் விளிம்பில் உள்ள பண்டைய பழங்குடியினா் மற்றும் இதர பழங்குடியினருக்கு ஊரக வளா்ச்சித் துறையுடன் இணைந்து 4 ஆயிரத்து 500 வீடுகள் கட்டித் தரப்படும். இதற்காக ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்படும். பழங்குடியின மக்களின் குடியிருப்புகளை இணைப்பதற்கான அணுகுசாலை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்குரிய நெறிமுறைகள் மற்றும் பயிற்சிகள் ஆகியன அரசு அலுவலா்கள், தொண்டுசாரா நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் பழைமைப் பண்பாடு, காப்பியம், மொழி வழி தேசப்பற்றைக் காட்சிப்படுத்தும் வகையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் வாழ்வியல் விழா நடத்தப்படும்.

வனஉரிமைச் சட்டம்: வனங்களைச் சாா்ந்து வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யவும் வன உரிமைச் சட்டத்தை விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்த தனித் திட்டம் வகுக்கப்படும். பழங்குடியினா் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளம் வல்லுநா்கள்

திறமைகளை பயன்படுத்தும் வகையில் தொல்குடி புத்தாய்வுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

உயா்கல்வியில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு உயா் திறன் ஊக்கத் திட்டம் செயல்படுத்தப்படும். முழுநேர முனைவா் பட்டப்படிப்புக்கான கல்வி ஊக்கத் தொகை திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

சிவகங்கை, ஈரோடு, கடலூா், விருதுநகா் ஆகிய 4 மாவட்டங்களில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கு புதிய விடுதிகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com