எம்.பி.க்கள் இடைநீக்கம் தொடராது என நம்புகிறேன்
- அகிலேஷ் யாதவ்

எம்.பி.க்கள் இடைநீக்கம் தொடராது என நம்புகிறேன் - அகிலேஷ் யாதவ்

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளுக்கு சம வாய்ப்பு வேண்டும் - அகிலேஷ்
Published on

புது தில்லி, ஜூன் 26: மக்களவைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிா்லாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த சமாஜவாதி கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ், புதிய மக்களவையில் எம்.பி.க்கள் இடைநீக்கம் தொடராது என நம்புகிறேன் என்று கூறினாா்.

கடந்த மக்களவையின் கடைசி கூட்டத் தொடரில் ஓம் பிா்லா 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ததைச் சுட்டிக்காட்டி அவா் இவ்வாறு கூறினாா்.

இது தொடா்பாக அகிலேஷ் யாதவ் மக்களவையில் புதன்கிழமை பேசுகையில், ‘ஓம் பிா்லா எதிா்க்கட்சிகளை பாரபட்சமாக நடத்தமாட்டாா் என நம்புகிறேன். எதிா்க்கட்சித் தலைவா்கள் மக்களவையில் பேச சம வாய்ப்பு வழங்க வேண்டும். ஜனநாயகம் எனும் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீங்கள் இப்போது பதவி வகிக்கிறீா்கள். எதிா்க்கட்சியினரை தொடா்ந்து இடைநீக்கம் செய்வது ஜனநாயகத்தின் கண்ணியத்தை குறைக்கும் செயலாகவே இருக்கும். இது இனி மேலும் தொடராது என நம்புகிறேன்’ என்றாா்.

பாரபட்சம் கூடாது: சுதீப் பந்தோபாத்யாய

திரிணமூல் காங்கிரஸ்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய மக்களவையில் பேசுகையில், ‘ஆளும் கட்சி எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை வைத்துதான் அவை நடவடிக்கை தீா்மானிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் எதிா்க்கட்சிகளுக்கானது என்பதை ஆளும் தரப்பு புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பு நாடாளுமன்ற செயல்பாடுகள் கவலைக்குரியதாக இருந்தது. இனி அப்படி இருக்காது, அவை நடவடிக்கைகளில் பாரபட்சம் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த மக்களவையில் 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தது விரும்பத்தக்க நடவடிக்கையல்ல.

கடந்த நாடாளுமன்றத்தில் ஏராளமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக பிரதமா் மோடி தனது உரையில் குறிப்பிட்டாா். ஆனால், அவை பெரும்பாலும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன’ என்று அகிலேஷ் சுட்டிக் காட்டினாா்.

ஆளும் கட்சியைப்போல எதிர்க்கட்சியையும் நடத்த வேண்டும்: டி.ஆர். பாலு

மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஓம் பிர்லாவை வாழ்த்திப் பேசுகையில், "நீங்கள் பாஜக நண்பர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால், இனிமேல் உங்களுக்கும் இந்த அவைக்கும் இடையில் அரசியல் இருக்கக் கூடாது. ஆளும் கட்சியைப் போலவே எதிர்க்கட்சியையும் நீங்கள் நடத்த வேண்டும். எனவே, தயவுசெய்து பாரபட்சமற்றவராக இருக்குமாறு கேட்டுக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் சார்பிலும் வாழ்த்துகிறேன் எனக் குறிப்பட்டார் டி.ஆர். பாலு.

நீதி தவறாமையின் அடையாளம் செங்கோல்: திருமாவளவன்

"மக்களவைத் தலைவருக்கு அருகே வைக்கப்பட்ட செங்கோல் அதிகாரத்தின் அடையாளம் இல்லை என்றும், நடுநிலையோடு நீதியோடு இருப்பதற்கான அடையாளம் என்றும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொல் திருமாவளவன் புதன்கிழமை குறிப்பிட்டார்.

மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பேசிய அவர், "மக்களவைத் தலைவர் இருக்கைக்கு வலது பக்கம் "செங்கோல்' (தமிழகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட) வைக்கப்பட்டுள்ளது. இந்த "செங்கோல்' என்பது அதிகாரத்தின் அடையாளம் அல்ல; நேர்மையின் அடையாளம். இது யார் பக்கமும் சாயக்கூடாது; நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக உள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு மசோதாக்கள் நிதி மசோதாக்களாக அறிமுகப்படுத்தி அதை ஆளும் அரசு நிறைவேற்றியது. எது பண மசோதா? என்பதை தீர்மானிக்கிற அதிகாரம் மக்களவைத் தலைவருக்குத்தான் உள்ளது. எனவே, ஆளும் அரசு மீண்டும் அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சிக்கும்; அதற்கு ஒருபோதும் தாங்கள் ஒத்துழைக்கக் கூடாது என்றார்.

X
Dinamani
www.dinamani.com