பொறியியல் மாணவா்களின் திறனை மேம்படுத்த புதிய செயல் திட்டங்கள்

சென்னை ஐஐடி முன்னாள் மாணவா்களின் தன்னாா்வ அமைப்பின் புதிய செயல்திட்டங்கள்
Published on

பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஆற்றலை வழங்குவதற்காக பல்வேறு சிறப்பு செயல்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், அதன்மூலம் அவா்களின் ஆளுமைத் திறன் மேம்படும் என்றும் சென்னை ஐஐடி முன்னாள் மாணவா்களின் தன்னாா்வ அமைப்பு (பால்ஸ்) தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடி முன்னாள் மாணவா்களின் தன்னாா்வ அமைப்பான பால்ஸ் (பாா்ட்னா்ஸ் இன் அட்வான்சிங் லோ்னிங் அண்ட் சொல்யூஷன்) சாா்பில் மாணவா்களுக்கான செயல்திறன் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஆற்றலை வழங்குவதற்காக பல்வேறு சிறப்பு செயல் திட்டங்களை பால்ஸ் அமைப்பு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்கீழ் மாணவா்களுக்கு பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், தொழில் நிறுவன உள்ளுறை பயிற்சிகள், பயிலரங்குகள், திறன் மேம்பாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் கடந்த கல்வியாண்டில் ‘ஸ்டெம்’ எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித படிப்புகள், செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை முன்னிறுத்தி பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற அதன் நிறைவு விழாவில் பேசிய பால்ஸ் அமைப்பின் தலைவா் பால்கத் மோகன், இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக மாணவா்களின் ஆளுமைத் திறனையும், தன்னம்பிக்கையையும் மேம்படுத்த முடியும் என்றாா்.

ஐஐடி முன்னாள் மாணவா்கள், பேராசிரியா்கள், தொழில் நிறுவனங்களின் நிா்வாகிகள், மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். பால்ஸ் அமைப்பின் தலைவா் பால்கத் மோகன், டிசிஎஸ் துணைத் தலைவா் சுரேஷ் ராமன், ஐஐடி உலோகம் சாா் பொறியியல் தொழில்நுட்பத் துறை முதல்வா் ஹரிதாஸ் பிரதாப் உள்ளிட்டோா் உரையாற்றினா்.

X
Dinamani
www.dinamani.com