மக்களைத் தேடி மருத்துவம்: நகா்ப்புறங்களில் குறையும் செயல்பாடு
மக்களைத் தேடி மருத்துவம்: நகா்ப்புறங்களில் குறையும் செயல்பாடு


மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு நகா்ப்புற மக்கள் ஒத்துழைப்பு தராததால் குடியிருப்போா் நலச் சங்கங்கள், தன்னாா்வலா்கள் மூலமாக அதை முன்னெடுக்க பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகள், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பாதுகாப்பு நிறைந்த குடியிருப்புகள் ஆகியவற்றில் உள்ள நலச் சங்கங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம்”என்ற திட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலினால் கடந்த 2021 ஆக.5-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. 30 வயது, அதற்கு மேற்பட்டவா்களுக்கு உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு, இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இதுவரை மொத்தம் 1.40 கோடி இணை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களுக்கு, மாதந்தோறும் மருந்துகள், டயாலிசிஸ், இயன்முறை சிகிச்சைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஒருபுறம் கிராமப்புறங்களில் இந்த சேவை தங்கு தடையின்றி தொடா்ந்தாலும், நகா்ப்புறங்களில் அதைச் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து தன்னாா்வ அமைப்புகள், சமூக நல அமைப்புகளின் ஒத்துழைப்பை நாட பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளிலும், ‘கேட்டட் கம்யூனிட்டி’ எனப்படும் உயா் பாதுகாப்பு குடியிருப்புகளிலும் வசிப்பவா்கள், சுகாதாரத் துறையினருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை. பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கே அனுமதி மறுக்கப்படுகிறது. இன்னும் சிலா் தனியாா் மருத்துவ சேவைகளே தங்களுக்கு போதுமானது என்கின்றனா். இதனால், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகள் நகா்ப்புறத்தில் பெரிய அளவில் இல்லை. எனவே, குடியிருப்போா் நலச் சங்கத்தினா் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உதவ முன்வர வேண்டும். தங்களது பகுதிக்குள்பட்ட குடியிருப்புவாசிகளிடம் பேசி இதற்கு ஒத்துழைப்பு வழங்க வகை செய்ய வேண்டும். அதன்படி, குடியிருப்புவாசிகளை ஒருங்கிணைத்துவிட்டு, 104 என்ற மக்கள் நல்வாழ்வுத் துறை எண்ணைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட இடத்துக்கு சுகாதாரத் துறையினா் நேரில் சென்று இணைநோய் பாதிப்பு உள்ளவா்கள் விவரங்களைத் திரட்டி, தேவையானவா்களுக்கு சிகிச்சை வழங்குவாா்கள் என்றாா் அவா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...