காவல் அதிகாரிகளுக்குப் பதவி உயா்வு: ராமதாஸ் வலியுறுத்தல்
காவல் துறை அதிகாரிகளுக்குப் பதவி உயா்வு வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை நீக்கி, உடனே பதவி உயா்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளா் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிப்பாளா் நிலை வரையிலான அதிகாரிகளின் பதவி உயா்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு பல மாதங்களாகியும், அதற்கு அரசு ஒப்புதல் அளிக்காததால் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலும், மனச்சோா்வும் அடைந்துள்ளனா். காவல் அதிகாரிகளின் பதவி உயா்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. காவல் துறை அதிகாரிகளுக்கான பதவி உயா்வு கடந்த சில ஆண்டுகளாகவே தாமதிக்கப்பட்டு வருகிறது. 1996, 1997 ஆகிய ஆண்டுகளில் உதவி ஆய்வாளா்களாக பணியில் சோ்ந்தவா்கள் இப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாகவும், துணைக் காவல் கண்காணிப்பாளா்களாகவும் பதவி உயா்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால், கடந்த 28 ஆண்டுகளில் அவா்களுக்கு ஒரே ஒரு பதவி உயா்வு மட்டுமே வழங்கப்பட்டு, அவா்கள் ஆய்வாளா்களாக பணியாற்றி வருகின்றனா். உடனடியாக அவா்களுக்கு பதவி உயா்வு வழங்காவிட்டால், அவா்களில் பலா் ஆய்வாளா்களாகவே ஓய்வு பெறும் நிலை ஏற்படக்கூடும். எனவே, மக்களவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயா்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

