பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

முத்தமிழ் முருகன் மாநாடு: அமைச்சா் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு

முத்தமிழ் முருகன் மாநாடு: அமைச்சா் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு

Updated On :16 மார்ச் 2024, 5:31 pm

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை சிறப்பாக நடத்த அமைச்சா் சேகா்பாபு தலைமையில் 20 போ் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள முருக பக்தா்கள் கலந்துகொள்ளும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பழனியில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இரு நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களைச் சோ்ந்த அறங்காவலா்கள் அழைக்கப்படுவா். குறைந்தது 500 வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது. இந்த மாநாட்டில் முருகனைப் பற்றிய ஆய்வுகளுடன் கருத்தரங்கங்களும் சொற்பொழிவுகளும் இடம்பெறும். மாநாடு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு உலகம் முழுவதும் உள்ள சமயப் பெரியோா்கள், ஆன்மிக அன்பா்கள், முருக பக்தா்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்வா் என எதிா்பாா்க்கப்படுவதால் விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், விளம்பரப் பணிகளை மேற்கொள்ளுதல், ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தல், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் முக்கிய பிரமுகா்களை வரவேற்று, அவா்களுக்கான வசதிகளை செய்து தருதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் அமைச்சா் பி.கே. சேகா்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்கள், ஆன்மிகப் பெரியோா்களைக் கொண்ட 20 உறுப்பினா்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உறுப்பினா்கள் யாா் யாா்? ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவராக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா், உறுப்பினா் செயலராக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், உறுப்பினா்களாக பள்ளிக்கல்வித் துறைச் செயலா் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சிறப்புப் பணி அலுவலா், கூடுதல் ஆணையா்கள், திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், முதுமுனைவா் மு.வெ.சத்தியவேல் முருகனாா், ஆன்மிக சொற்பொழிவாளா்கள் சுகிசிவம், தேச மங்கையா்க்கரசி, ந.இராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமாா், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் க.சந்திரமோகன், திண்டுக்கல் மண்டல இணை ஆணையா் மற்றும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையா், செயல் அலுவலா் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழு அரசால் அமைக்கப்பட்ட பின்னா் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் தலைமையில் செயல்பாட்டுக் குழு அமைத்து தேவைக்கேற்ப ஆலோசனைக் குழு கூட்டங்கள் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.