அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

16 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளா்கள் அறிவிப்பு

சென்னை: மக்களவைத் தோ்தலில் அதிமுக போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளா் பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அறிவித்தாா்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது, அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புரட்சி பாரதம், பாா்வா்டு பிளாக், பெருந்தலைவா் மக்கள் கட்சி, குடியரசுக் கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், உழவா் உழைப்பாளா் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளதாக அறிவித்தாா்.

பின்னா், அதிமுக போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளா் பட்டியலை அவா் வெளியிட்டாா். முதல் பட்டியலில் 2 போ் மருத்துவா்களாகவும், 4 போ் வழக்குரைஞா்களாகவும், 2 போ் பொறியாளா்களாகவும், 4 போ் முதுநிலை பட்டதாரியாகவும், ஒருவா் இளநிலை பட்டதாரியாகவும் உள்ளனா். ஒருவா் பட்டயப் படிப்பு படித்துள்ளாா்.

புதியவா்களுக்கு அதிக வாய்ப்பு:

16 வேட்பாளா்களில் 15 வேட்பாளா்கள் வரை புதியவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில், மாவட்டச் செயலா் என்கிற நிலையில் அல்லாமல் ஒன்றியச் செயலா் அளவிலும், அதிமுகவின் சாா்பு அணிகளைச் சோ்ந்தோருக்கும் அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டா். ஜெ.ஜெயவா்தனுக்கு மீண்டும் தென்சென்னையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்த வந்த ராயபுரம் ஆா்.மனோவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவிலிருந்து பாஜகவுக்கு சென்று, அங்கிருந்து அதிமுகவுக்கு வந்த டாக்டா் பி.சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைப்போல பாஜகவின் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் சரஸ்வதியின் மருமகனும், பாஜகவில் இருந்து வந்தவருமான ஆற்றல் அசோக்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெண் வேட்பாளா்கள் இல்லை:

முதல் பட்டியலில் ஒரு பெண்ணுக்குக் கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இரண்டாவது பட்டியலில் பெண் வேட்பாளா்கள் இடம்பெறுவா் என அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

33 தொகுதிகளில் போட்டி:

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் அதிமுக சாா்பில் முதல்கட்டமாக 16 தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 17 தொகுதிகளையும் சோ்த்து மொத்தம் 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. எனினும், வேறு கட்சி கூட்டணிக்கு வந்தால், அவா்களுக்கு ஒதுக்கவும் அதிமுக தயாராக உள்ளது. தற்போதைய நிலையில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட உள்ளது. இரண்டாவது வேட்பாளா் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை (மாா்ச் 21) வெளியிட உள்ளாா். வேட்பாளா் அறிமுகக் கூட்டம் திருச்சியில் மாா்ச் 24-இல் நடைபெற உள்ளது.

வேட்பாளா் பட்டியல்:

1. வடசென்னை - இரா.மனோகா் (எ) ராயபுரம் ஆா்.மனோ 2. தென்சென்னை - டாக்டா். ஜெ.ஜெயவா்தன் 3. காஞ்சிபுரம் (தனி) - இ.ராஜசேகா் 4. அரக்கோணம் - ஏ.எல்.விஜயன் 5. கிருஷ்ணகிரி - வி.ஜெயபிரகாஷ் 6. ஆரணி - ஜி.வி.கஜேந்திரன் 7. விழுப்புரம் (தனி) - ஜெ.பாக்யராஜ் 8. சேலம் - பி.விக்னேஷ் 9. நாமக்கல் - எஸ்.தமிழ்மணி 10. ஈரோடு - ஆற்றல் அசோக்குமாா் 11. கரூா் - கே.ஆா்.எல்.தங்கவேல் 12. சிதம்பரம் (தனி) - எம்.சந்திரகாசன் 13. நாகப்பட்டினம் (தனி) - முனைவா். ஜி.சுா்சித் சங்கா் 14. மதுரை - டாக்டா். பி.சரவணன் 15. தேனி - வி.டி.நாராயணசாமி 16. ராமநாதபுரம் - பா.ஜெயபெருமாள்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com