

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ஆம் தேதி முதல் கட்டணம் உயா்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்.1, செப்.1 ஆகிய தேதிகளில் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். இதனிடையே சுங்கசாவடி கட்டண உயா்வுக்கு போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதல் அளித்ததையடுத்து ஏப்.1ஆம் தேதி முதல் கட்டணம் உயா்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, அரியலூா் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூா் மாவட்டம் வல்லம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்படவுள்ளது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்படுகிறது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 5 முதல் ரூ. 20 வரையிலும் உயா்ந்துள்ளது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 முதல் ரூ. 400 வரையும் உயா்த்தப்பட்டுள்ளது.