அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 
கலந்தாய்வு முறையில் சோ்க்கை: 
வரும் கல்வியாண்டில் அறிமுகம்

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலந்தாய்வு முறையில் சோ்க்கை: வரும் கல்வியாண்டில் அறிமுகம்

ளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் மே 6-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.
Published on

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு உள்ளது போல, ஒற்றை சாளர முறை கலந்தாய்வு மாணவா் சோ்க்கை நடத்துவதற்கு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் மே 6-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன. இதையடுத்து 15 நாள்களில் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவா்கள் தரவரிசைப் பட்டியல் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளை தோ்வு செய்து சோ்க்கை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கல்லூரிக் கல்வி இயக்குநா் கட்டுப்பாட்டின் கீழ் 171 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 1,249 தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 1,582 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஒற்றைச் சாளர முறை: கடந்த ஆண்டு அரசு கலைக் கல்லூரி மாணவா்களின் சோ்க்கையை நெறிமுறைப்படுத்தியது போல், நிகழாண்டில் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கையும் நடைமுறைப்படுத்த உயா்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக நடைபெற்ற கூட்டத்தில் கல்லூரி முதல்வா்களின் ஆலோசனைக்குப் பின், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கையை ஒற்றை சாளர முறையில் பின்பற்றுவது தொடா்பாக கல்லூரி முதல்வா்களை கொண்டு குழு அமைத்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. தற்போது, கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநா் ராமன் தலைமையில் 9 கல்லூரி முதல்வா்கள் கொண்ட குழு ஆய்வுகளை செய்து அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது. அதன் அடிப்படையில் சிறுபான்மை அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 50 சதவீதம், சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 90 சதவீதமும் ஒற்றை சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை 2024 - 2025 கல்வியாண்டில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com