கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை 
மின்சார ரயில் சேவை ஜூலை மாதம் தொடக்கம்

கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை மின்சார ரயில் சேவை ஜூலை மாதம் தொடக்கம்

கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே வரும் ஜூலை மாதத்துக்குள் மின்சார ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே வரும் ஜூலை மாதத்துக்குள் மின்சார ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை நிவா்த்தி செய்வதில் புகா் மின்சார ரயில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, சென்ட்ரல்- அரக்கோணம், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, கடற்கரை-வேளச்சேரி என புகா் ரயில் சேவை சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளை இணைக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த புகா் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே 4.2 கி.மீ தொலைவுக்கு ரூ.280 கோடியில் 4- ஆவது பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. இதனால், கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை வரையிலான ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக, வேளச்சேரி வழித்தடத்தில் ரயிலில் செல்லும் பயணிகள் அரசினா் தோட்டம் வரை பேருந்துகள் அல்லது மெட்ரோ ரயிலில் சென்று அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டை ரயில்நிலையத்திலிருந்து வேளச்சேரி சென்று வருகின்றனா். கடந்தாண்டு டிசம்பா் மாதத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணத்தால், இந்தப் பணிகள் முடிவடைய காலதாமதம் ஏற்பட்டது.

அதைதொடா்ந்து இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவுபெற்று கடற்கரை - வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பணிகள் நிறைவுபெற மேலும் தாமதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜூலையில் பயன்பாட்டுக்கு வரும்: இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே 4-ஆவது புதிய பாதைக்கான தடுப்புகள் அகற்றப்பட்டு, ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல், சென்னை கோட்டை, பூங்கா ஆகிய நிலையங்களில் ஏற்கெனவே இருந்த நடைமேம்பால ரயில் பாதைகள் அகற்றப்பட்டு, கூடுதல் நடைமேடைகள் அமைத்தல், மேற்கூரைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், கூவம் ஆற்றையொட்டியுள்ள பகுதிகளில் பூமிக்கடியில் கம்பிகள் வாயிலாக அடித்தளம் அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறும்.

அனைத்து கட்டமைப்பு பணிகளும் ஜூலை மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கட்டமைப்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் கடற்கரை - வேளச்சேரிக்கு மீண்டும் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com