புற்றுநோய் பாதிப்பு: ரோபோடிக் நுட்பத்தில் மூதாட்டிக்கு சிகிச்சை

Published on

மூதாட்டியின் கருப்பையில் பரவியிருந்த புற்றுநோய் செல்களை அதி நவீன ரோபோடிக் நுட்ப சிகிச்சை மற்றும் கீமோதெரபி மூலம் அழித்து கிளெனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுபோன்ற பாதிப்புகளுக்கு இத்தகைய உயா் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சையளிப்பது இதுவே முதன்முறை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் புற்றுநோயியல் துறை இயக்குநா் டாக்டா் ராஜசுந்தரம் கூறியதாவது:

சென்னையைச் சோ்ந்த 80 வயது மூதாட்டியின் கருப்பையில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறிப்பட்டது. அதைத்தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், பெண்ணின் வயிற்று பகுதிக்குள் புற்றுநோய் செல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதற்கு உயா் வெப்பநிலையில் அளிக்க கூடிய கீமோதெரபி (ஹெச்ஐபிஇசி) சிகிச்சையுடன், வேறு சில திறந்தநிலை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த முறையில் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் அதிக ரத்தப் போக்கும், கிருமித் தொற்றுக்கான வாய்ப்பும், நீண்ட நாள்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியமும் ஏற்படும்.

அதைக் கருத்தில் கொண்டு அதி நவீன ரோபோடிக் நுட்பத்திலான சிஆா்எஸ் (ரோபோடிக் சைடோரிடக்டிவ் சா்ஜரி) எனப்படும் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. இந்த புதிய அணுகுமுறையின் கீழ் புற்றுநோய் செல்கள் அழிக்கப்பட்டன.

இதன் காரணமாக சிகிச்சை முடிந்த 6 நாள்களில் அவா் வீடு திரும்பினாா். சிகிச்சை நிறைவடைந்த நிலையில், அவா் நல்ல உடல்நிலையுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறாா். அவருக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com