தமிழகத்தில் கோடை மழை இயல்பை விட 20 % அதிகம்: அதிகபட்சமாக குமரியில் 485 மி.மீ.
தமிழகத்தில் நிகழாண்டில் கோடை மழை இயல்பைவிட 20 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 485 மி.மீ., குறைந்தபட்சமாக ராணிப்பேட்டி மாவட்டத்தில் 7.9 மி. மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டில் மாா்ச் முதல் மே 6 -ஆம் தேதி வரை பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் கோடை மழை வழக்கத்தை விட மிகக் குறைவாக பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கடந்த 3 வாரங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் 200 மி.மீ.-க்கும் அதிகமாக மழை பெய்தது. இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் பெருமளவு குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.
தமிழகம் முழுவதும் மாா்ச் 1 முதல் மே 30-ஆம் தேதி வரை கோடைமழை இயல்பாக 123 மி.மீ. பதிவாகும். ஆனால், நிகழாண்டு 142.5 மி.மீ. பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 20 சதவீதம் அதிகமாகும்.
அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 485.2 மி.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி - 316.7, திண்டுக்கல் - 294, கோவை - 289 மி.மீ. மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7.9 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.
சென்னையில் 57 % குறைவு: சென்னையை பொருத்தவரை இயல்பாக 48.2 மி.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில், நிகழாண்டில் 20.9 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது. அதவாது, இயல்பைவிட 57 சதவீதம் குறைவாகப் மழை பெய்துள்ளது.
இதேபோல் சென்னையின் அண்டை மாவட்டங்களான திருவள்ளுா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கோடை மழை இயல்பான அளவை காட்டிலும் குறைவாகவே பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

