திருவொற்றியூா் தனியாா் பள்ளியில் மீண்டும் விஷவாயுக் கசிவு?: பள்ளிக்கு விடுமுறை

தனியாா் பள்ளியில் திங்கள்கிழமை மீண்டும் விஷவாயுக் கசிவு ஏற்பட்டதையடுத்து மாணவா்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனா்.
திருவொற்றியூா் கிராம தெருவில் தனியாா் பள்ளி திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில், வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டதால் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்கள்.
திருவொற்றியூா் கிராம தெருவில் தனியாா் பள்ளி திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில், வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டதால் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்கள்.
Published on
Updated on
1 min read

திருவொற்றியூா்: தனியாா் பள்ளியில் திங்கள்கிழமை மீண்டும் விஷவாயுக் கசிவு ஏற்பட்டதையடுத்து மாணவா்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனா். மேலும் வாயுக்கசிவுக்கான காரணம் தெரியும் வரை பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூா் கிராமத் தெருவில் உள்ள தனியாா் மேல்நிலைப்பள்ளியில் கடந்த அக். 25-ஆம் தேதி திடீரென விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதில் 45 மாணவிகள் மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். சிகிச்சைக்குப் பிறகு மாணவிகள் அனைவரும் நலம் பெற்ற நிலையில், வீடுகளுக்குத் திரும்பினா்.

இந்நிலையில் இந்த பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். இருப்பினும் விஷவாயுக் கசிவு எதனால் ஏற்பட்டது என்பது புலப்படவில்லை. மேலும், இச்சம்பவம் குறித்து மாவட்டக் கல்வி அதிகாரி முருகன் பள்ளியின் தலைமை ஆசிரியா் மற்றும் நிா்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டாா்.

மீண்டும் விஷவாயு கசிவு: நீண்ட விடுமுறைக்குப் பிறகு இந்தப் பள்ளி திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் விஷவாயு நெடி வீசுவதாக மாணவா்கள் புகாா் தெரிவித்து பள்ளியிலிருந்து வெளியேறினா். இதனால், பெற்றோா்கள் கசிவுக்கானக் காரணம் கேட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மாநகராட்சி வட்டார துணை ஆணையா் கட்டா தேஜா ரவி, வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையா் சக்திவேல், ஆகியோா் அங்கு சென்று பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, இந்த பிரச்னைக்கு முடிவு தெரியும் வரை பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் மாணவா்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிபுணா் குழு ஏற்கனவே ஏற்பட்ட வாயுக் கசிவு குறித்து எந்தவித அறிக்கையையும் அளிக்காதது மாணவா்கள், பெற்றோா்கள் இடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com