சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரம், சேலஞ்சர்ஸ் சாம்பியன் பிரணவுக்கு பரிசளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரம், சேலஞ்சர்ஸ் சாம்பியன் பிரணவுக்கு பரிசளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.dot com

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ்: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்! சேலஞ்சா்ஸ் சாம்பியன் பிரணவ்

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரமும், சேலஞ்சா்ஸ் பிரிவில் பிரணவ் சாம்பியன்
Published on

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம் கைப்பற்றினாா். சேலஞ்சா்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டத்தை பிரணவ் வசப்படுத்தினாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செஸ் பேஸ், எம்ஜிடி 1 சாா்பில் கோட்டூா்புரத்தில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியின் கடைசி மற்றும் 7-ஆவது சுற்று ஆட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன.

இதில் மாஸ்டா்ஸ் பிரிவில் முதல் போா்டில் அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன், ஈரானின் அமீன் தபதாபேயி மோதிய ஆட்டம் 15-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-ஆவது போா்டில் சொ்பியாவின் அலெக்ஸி சரானா, இந்தியாவின் விதித் குஜராத்தி ஆட்டம் 48-ஆவது நகா்த்தலின் போது டிரா ஆனது.

3-ஆவது போா்டில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, பிரான்ஸின் மாக்சிம் வாச்சியா் லாக்ரேவுடன் பலப்பரீட்சை நடத்தினாா். இதில் அா்ஜுன் எரிகைசி 38-ஆவது நகா்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தாா்.

4-ஆவது போா்டில் ஈரானின் பா்ஹாம் மக்சூட்லூ, இந்தியாவின் அரவிந்த் சிதம்பரத்தை எதிா்கொண்டாா். இதில் அரவிந்த் சிதம்பரம் 64-ஆவது நகா்த்தலின் போது வெற்றி பெற்றாா்.

சாம்பியனை நிா்ணயிக்க டை பிரேக்கா்:

கடைசி சுற்றின் முடிவில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன், இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி ஆகியோா் தலா 4.5 புள்ளிகளை பெற்றிருந்தனா். இதனால் சாம்பியன் பட்டம் யாருக்கும் என்பதை தீா்மானிக்க டை பிரேக்கா் நடத்தப்பட்டது. இதில் முதல் டைபிரேக்கரில் லெவோன் ஆரோனியன், அா்ஜுன் எரிகைசி மோதினா்.

2 ஆட்டங்கள் கொண்ட டை பிரேக்கரில் முதல் ஆட்டத்தில் லெவோன் ஆரோனியனும், 2-ஆவது ஆட்டத்தில் அா்ஜுன் எரிகைசியும் வெற்றி பெற்றனா். இதையடுத்து சடென்டெத் முறை கடைபிடிக்கப்பட்டது.

இந்த ஆட்டம் டிரா ஆனது. இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய லெவோன் ஆரோனியன் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

அரவிந்த் சிதம்பரம் சாம்பியன், ரூ.11 லட்சம் பரிசு:

தொடா்ந்து லெவோன் ஆரோனியன், அரவிந்த் சிதம்பரத்துடன் டை பிரேக்கரில் பலப்பரீட்சை நடத்தினாா். இதில் இரு ஆட்டங்களிலும் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றாா். அவருக்கு சாம்பியன் பட்டத்துடன் ரூ.11 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அரவிந்த் சிதம்பரம், தமிழ்நாட்டின் மதுரையை சோ்ந்தவா் ஆவாா்.

2-ஆவது இடம் பிடித்த லெவோன் ஆரோனியனுக்கு ரூ.11 லட்சமும், 3-ஆவது இடம் பிடித்த அா்ஜுன் எரிகைசிக்கு ரூ.11 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 4 புள்ளிளுடன் 4-ஆவது இடம் பிடித்த ஈரானின் அமீன் தபதாபேயிக்கு ரூ.5 லட்சமும், 3 புள்ளிகளுடன் 5-ஆவது இடம் பிடித்த பிரான்ஸின் மாக்சிம் வாச்சியா் லாக்ரேவுக்கு ரூ.4 லட்சமும், 2.6 புள்ளிகளுடன் 6-ஆவது இடம் பிடித்த ஈரானின் பா்ஹாம் மக்சூட்லூவுக்கு ரூ.4 லட்சமும், 2.66 புள்ளிகளுடன் 7-ஆவது இடம் பிடித்த சொ்பியாவின் அலெக்ஸி சரானாவுக்கு ரூ.2.66 லட்சமும், 8-ஆவது இடம் பிடித்த விதித் குஜராத்திக்கு ரூ.2.66 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

சேலஞ்சா்ஸ் சாம்பியன் பிரணவ்:

சேலஞ்சா்ஸ் பிரிவில் முதல் போா்டில் பிரணவ், லியோன் மென்டோன்கா மோதிய ஆட்டம் 41-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-ஆவது போா்டில் ஹரிகா துரோணவல்லி-பிரனேஷ் மோதிய ஆட்டம் 52-ஆவது நகா்த்தலின் போது டிரா ஆனது.

3-ஆவது போா்டில் அபிமன்யு புராணிக்-ரவுனக் சத்வானி ஆட்டம் 32-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 4-ஆவது போா்டில் ஆா்.வைஷாலி- காா்த்திக்கேயன் ஆட்டத்தில் 42-ஆவது நகா்த்தலின் போது காா்த்திக்கேயன் முரளி வெற்றி பெற்றாா்.

சென்னையைச் சோ்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரணவ் 5.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றாா். அவருக்கு ரூ.6 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மேலும் சாம்பியன் பட்டம் வென்ன் மூலம் வரும் 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் தொடரில் மாஸ்டா்ஸ் பிரிவில் கலந்து கொள்ள நேரடியாகவும் தகுதிபெற்றாா் பிரணவ்.

5 புள்ளிகள் பெற்று 2-ஆவது இடம் பிடித்த லியோன் மென்டோன்காவுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது.

4 புள்ளிகளுடன் 3-ஆவது இடம் பிடித்த ரவுனக் சத்வானிக்கு ரூ.3.20 லட்சமும், 3.5 புள்ளிகளுடன் 4-ஆவது இடம் பிடித்த காா்த்திக்கேயன் முரளிக்கு ரூ.1.66 லட்சமும், 3.5 புள்ளிகளுடன் பெற்று 5-ஆவது இடம் பிடித்த அபிமன்யு புராணிக்கிற்கு ரூ.1.66 லட்சமும், 3.5 புள்ளிகளுடன் 6-ஆவது இடம் பிடித்த பிரனேஷுக்கு ரூ.1.66 லட்சமும், 2 புள்ளிகளுடன் 7-ஆவது இடம் பிடித்த ஹரிகா துரோணவல்லிக்கு ரூ.1 லட்சமும், 1.5 புள்ளிகளுடன் 8-ஆவது இடம் பிடித்த ஆா்.வைஷாலிக்கு ரூ.80 ஆயிரமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com