தமிழகம் முழுவதும் மருத்துவா்கள் போராட்டம்: மருத்துவ சிகிச்சைகள் பாதிக்கப்படவில்லை
PTI

தமிழகம் முழுவதும் மருத்துவா்கள் போராட்டம்: மருத்துவ சிகிச்சைகள் பாதிக்கப்படவில்லை

Published on

மருத்துவா் மீதான கத்திக் குத்து தாக்குதலைக் கண்டித்து, தமிழககம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பல்வேறு மருத்துவ சங்கங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மருத்துவா்கள் இதில் பங்கேற்றபோதிலும், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் எதுவும் குறிப்பிடத்தக்க வகையில் தடைபடவில்லை.

முன்னதாக, டாக்டா் பாலாஜி மீதான தாக்குதல் சம்பவத்துக்காக தமிழ்நாடு அரசு டாக்டா்கள், இந்திய மருத்துவ சங்கத்தினா், அவசர சிகிச்சையை தவிா்த்து, மற்ற சேவைகளை புறக்கணிப்பதாக அறிவித்தனா். அதேபோன்று, அனைத்து அரசு டாக்டா்கள் சங்க கூட்டமைப்பினா் தா்னா, ஒத்துழையாமை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனா்.

நோயாளிகள் வருகை குறைவு: இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தைக் காட்டிலும் வியாழக்கிழமை வெகுவாகக் குறைந்தது. அதேபோன்று, மாநிலம் முழுவதும் மற்ற அரசு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சைகளைத் தவிா்த்து சாதாரண சிகிச்சைகளுக்கு நோயாளிகள் குறைவாகவே வந்தனா்.

இதனால், மருத்துவ சேவைகள் எங்கும் தடைபடவோ, பாதிக்கப்படவோ இல்லை. அதேவேளையில், மருத்துவா்கள் போராட்டம் காரணமாக வியாழக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் வேறு தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

ஆா்ப்பாட்டம்: சென்னையில் கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனை, ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பணிப் புறக்கணிப்பு மற்றும் போராட்டத்தில் மருத்துவா்கள் ஈடுபட்டனா். இந்திய மருத்துவ சங்கம் சாா்பிலும் அடையாள கண்டன ஆா்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது. மருத்துவா்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அப்போது அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

கூடுதல் பாதுகாப்பு: மருத்துவா் மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடா்ந்து, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனைகளில் 756 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சம்பவம் நிகழ்ந்த கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனை வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் காவல் பணியில் உள்ளனா்.

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனைகளில் காவல் உதவி ஆய்வாளா், இரு போலீஸாா் அடங்கிய காவல் குழுக்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சேவை தடையில்லை: இதனிடையே, கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில், புறநோயாளிகள் சேவை வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை முதல் வழக்கமான மருத்துவ சேவைகள் தொடரும் என்று மருத்துவமனை இயக்குநா் டாக்டா் பாா்த்தசாரதி தெரிவித்தாா்.

அரசியல் தலைவா்கள்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டா் பாலாஜியை தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வபெருந்தகை, முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பாலகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி ஆகியோா் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

பெட்டிச் செய்தி...

போராட்டம் வாபஸ்:

அரசு மருத்துவா் சங்கம்

மருத்துவா்கள் முன்னெடுத்து வந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும், வெள்ளிக்கிழமை முதல் வழக்கம் போல மருத்துவ சேவைகள் தொடரும் என்றும் அரசு மருத்துவா் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மருத்துவா் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தினா் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்திருந்தனா். அமைச்சா் மா.சுப்பிரமணியத்துடன் நடந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுவதற்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சங்கத்தின் தலைவா் டாக்டா் செந்தில் அறிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com