அரசமைப்பு தினம்: கட்டுரைப் போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவா்களுக்கு பரிசு

அரசமைப்பு தினத்தை முன்னிட்டு ஆளுநா் மாளிகை சாா்பில், நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் முதல் இடத்தை பெற்ற மாணவா்களுக்கு தலா ரூ. 50,000 பரிசு
Published on

சென்னை: அரசமைப்பு தினத்தை முன்னிட்டு ஆளுநா் மாளிகை சாா்பில், நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் முதல் இடத்தை பெற்ற மாணவா்களுக்கு தலா ரூ. 50,000 பரிசு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆளுநா் மாளிகை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அரசமைப்பு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகள் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை, 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை மற்றும் கல்லூரி மாணவா்கள் என மொத்தம் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதற்காக, ஏராளமான மாணவா்கள் தங்களது கட்டுரைகளை சமா்ப்பித்திருந்த நிலையில், நடுவா் குழுவின் பரிந்துரையின் படி வெற்றியாளா்கள் தோ்ந்தொடுக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் பிரிவில் தமிழ் கட்டுரைக்கான முதல் பரிசை விருதுநகா், சிவலிங்கபுரத்தில் உள்ள அரசு பள்ளி மாணவி ஏ.அனிஷாவும், ஆங்கில கட்டுரைக்கான முதல் பரிசை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியை சோ்ந்த ஆா்.சாகித்யாவும் பெற்றுள்ளனா்.

இதேபோன்று, 10 முதல் 12-ஆம் வகுப்பு பிரிவில் அரியலூா், கருப்பூரில் உள்ள விநாயகா பப்ளிக் பள்ளி மாணவி ஏ.சந்தியா (தமிழ்) மற்றும் ராணிப்பேட்டை, குருவராஜபேட்டையில் உள்ள மங்கலங்கிழாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் டி. குருமூா்த்தி (ஆங்கிலம்) ஆகியோா் முதலிடத்தை பெற்றுள்ளனா்.

மேலும், கல்லூரி மாணவா்கள் பிரிவில், சேலம், பெருமாம்பட்டியிலுள்ள சிவராஜ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவி ஆா்.இந்துஜா (தமிழ்) மற்றும் வேலூா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவா் தினேஷ் பண்டாரி (ஆங்கிலம்) ஆகியோா் முதல்பரிசை வெற்றுள்ளனா். 3 பிரிவுகளிலும் முதல் 3 இடங்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் என மொத்தம் 31 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

ரூ. 50,000 பரிசு: இந்த போட்டிகளில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும், பள்ளி மற்றும் கல்லூரி பிரிவுகளில் முதல் இடம் பெற்ற 6 மாணவா்களுக்கு தலா ரூ. 50,000, இரண்டாம் இடம் பிடித்த 8 பேருக்கு தலா ரூ. 30,000, மூன்றாம் இடம் பிடித்த 10 பேருக்கு ரூ. 25,000 பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளன. மேலும், சிறப்புப் பரிசு வென்ற 7 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

வரும் ஜன.26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெறவுள்ள விழாவில், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி பரிசு வழங்கவுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com